2018-03-31 11:35:00

சிலுவைப்பாதையின் முடிவில், திருத்தந்தை கூறிய செபம்


மார்ச்,31,2018. மார்ச் 30, புனித வெள்ளி, இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள கொலோசெயம் என்ற திடலில் நடைபெற்ற சிலுவைப்பாதையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய செபம்:

ஆண்டவராகிய இயேசுவே, வெட்கம், மனவருத்தம், நம்பிக்கை ஆகியவற்றால் நிறைந்துள்ள எம் பார்வை உம்மைநோக்கித் திரும்பியுள்ளது.

உன்னதமான உம் அன்பிற்குமுன், எம் பாவங்களுக்காய் நீர் துன்புற்றபோது, உம்மை, தனியே விட்டுச் சென்றதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.

'அனைவரும் உம்மைவிட்டு ஓடிப் போய்விட்டாலும், நான் ஓடிப்போக மாட்டேன்' என்று ஆயிரம் முறை சொன்னாலும், சோதனை வந்ததும் தப்பியோடியதால் உண்டாகும் வெட்கம் இது.

உமக்குப் பதிலாக பரபாஸையும், உமக்குப் பதிலாக அதிகாரத்தையும், உமக்குப் பதிலாக வெளித்தோற்றத்தையும், உமக்குப் பதிலாக, பணம் என்ற கடவுளையும், நித்திய வாழ்வுக்குப் பதிலாக இவ்வுலக வாழ்வையும் தேர்ந்ததால் உண்டாகும் வெட்கம் இது.

ஒவ்வொருமுறையும் துன்பம் வந்ததும், 'நீர் கடவுளின் மகன் என்றால், காப்பாற்றும், நாங்கள் நம்புவோம்' என்று சொன்னதால் உண்டாகும் வெட்கம் இது.

உமது பணியாளர்கள் உட்பட, எத்தனையோ பேர், பேராசையாலும், வெறுமையான புகழாலும் ஏமாற்றப்பட்டதால் உண்டாகும் வெட்கம் இது.

பிரிவுகளாலும், போர்களாலும் சிதைந்துபோன உலகை, தன்னலத்தால் விழுங்கப்பட்டுவரும் உலகை, இளையோர், சிறியோர், நோயுற்றோரை ஒதுக்கித்தள்ளும் உலகை, இளையோரிடம் விட்டுச்செல்லும் எம் தலைமுறையால் உண்டாகும் வெட்கம் இது.

வெட்கம் என்ற உணர்வை, தொலைத்துவிட்டதால் உண்டாகும் வெட்கம் இது.

ஆண்டவராகிய இயேசுவே, புனிதமான வெட்கம் என்ற அருளை, எப்போதும் எமக்குத் தாரும்.

பொருள் செறிந்த உம் அமைதிக்கு முன், இரக்கத்தைக் கெஞ்சிக் கேட்கும் எம் பார்வை, மனவருத்தம் நிறைந்ததாய் உள்ளது.

தீமையிலிருந்து நீர் மட்டுமே எங்களைக் காப்பாற்றமுடியும் என்ற உறுதியிலிருந்து பிறக்கும் மனவருத்தம் இது.

வெறுப்பு, தன்னலம், அகந்தை,பேராசை, பழிக்குப்பழி என்ற தொழுநோயிலிருந்து உமது அன்பு ஒன்றே எங்களைக் குணமாக்கமுடியும்; பிள்ளைகளுக்குரிய மாண்பைத் தரக்கூடிய உமது அன்பு ஒன்றே, எங்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற உறுதியிலிருந்து பிறக்கும் மனவருத்தம் இது.

தன் அவலத்தின் ஆழத்திலிருந்தபோது, உம்மிடம் மட்டுமே தன் சக்தியை உணர்ந்த தாவீதின் மனவருத்தம் இது.

உமது கண்களைச் சந்தித்த வேளையில், உம்மை மறுதலித்ததை எண்ணி அழுத்த பேதுருவின் மனவருத்தம் இது.

புனிதமான மனவருத்தம் என்ற அருளை, எப்போதும் எமக்குத் தாரும்.

உமது உன்னத மாட்சிக்கு முன், எங்கள் விரக்தி என்ற இருளில் நம்பிக்கை பிறக்கிறது; ஏனெனில், அளவற்ற அன்பே உம் அன்பின் அளவு என்பதை உணர்கிறோம்.

நன்மை ஒன்றே தீமையை வெல்லும், மன்னிப்பு ஒன்றே பழிவாங்கும் உணர்வை வெல்லும், உடன்பிறந்த உணர்வே பகைமையை வெல்லும் என்ற உம் செய்தி, இன்றும் பலருக்குத் தூண்டுதலாக அமைவதால் உருவாகும் நம்பிக்கை இது.

விரைவில் வரும் இலாபம், எளிதில் கிடைக்கும் பணம் ஆகியவற்றால் விழுங்கப்பட்டுவரும் இவ்வுலகில், உமது தியாகம், இன்னும் பலரின் உள்ளங்களைத் தொட்டு, அவர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க தூண்டுதலாக அமைவதால் உருவாகும் நம்பிக்கை இது.

உறங்கிக்கொண்டிருக்கும் உலகின் மனசாட்சிக்குச் சவால் விடுக்கும் வண்ணம், வறியோர், புலம்பெயர்ந்தோர், சுரண்டப்படுவோர், பசியுற்றோர், சிறைப்படுத்தப்பட்டோர் நடுவே, மறைப்பணியில் ஈடுபடுவோர், தொடர்ந்து உழைப்பர் என்ற நம்பிக்கை இது.

உமது திருஅவைக்கு எதிராக பல அவதூறுகள் எழுந்தாலும், தன்னலமற்ற தாராள மனதுடன், அது மனிதருக்குப் பணியாற்றி வருகிறது என்பதை அறிவதால் வரும் நம்பிக்கை இது.

வெளிவேடக்காரர் மற்றும் சட்ட அறிஞர்களின் பேராசையாலும் கோழைத்தனத்தாலும் உருவாக்கப்பட்ட உமது சிலுவை, உயிர்ப்பின் ஊற்றாக, கல்லறை இருளை அகற்றும் உதயமாக உள்ளது என்பதை அறிவதால் வரும் நம்பிக்கை இது.

புனிதமான நம்பிக்கை என்ற அருளை, எப்போதும் எமக்குத் தாரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.