2018-03-29 13:52:00

அன்பை மட்டுமே விதைப்போம், காரணம் அன்புதான் இயேசு


தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறோம். நாம் எடுத்த தவ முயற்சிகள், தியானங்கள், ஒறுத்தல் முயற்சிகள், தேவைப்படுவோருக்கு உதவும் மனப்பான்மை இவையனைத்தும் நம்மில் மாற்றத்தையும், இறைவனின் அருளையும் நம் அனைவருக்கும் தருவாதாக அமையட்டும்.

இன்று ஆண்டவர் இயேசு குருத்துவம், நற்கருணை ஆகிய இரு திருவருட்சாதனங்களை ஏற்படுத்தினார் என்பது நமது ஆழமான நம்பிக்கை. இயேசு தலைமைக் குரு என்ற முறையில், எவ்வாறு பலி ஒப்புக்கொடுத்து மக்களைப் புனிதமாக்கினாரோ, நல்ல ஆயர் என்ற முறையில் மந்தைகளை வழிநடத்தினாரோ, நல்ல போதகர் என்ற முறையில் மக்களுக்கு உயிரூட்டும் வார்த்தைகளைக் கொடுத்தாரோ அதேபோல, தனக்குப் பின்னும் இப்பணிகளையெல்லாம் தொடர தனது குருத்துவத்தில் நமக்கும் பங்குகொடுக்கிறார்.

இன்றைய நாளை பெரிய வியாழன், புனித வியாழன் என்று அழைக்கின்றோம். ஆங்கிலத்தில் இதனை Maundy Thursday என்று அழைக்கிறோம். Maundy என்ற இலத்தீன் வார்த்தைக்கு Mandatory or obligatory என்று பொருள் கூறப்படுகிறது. அதாவது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று அல்லது கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்று என பொருள் கொள்ளப்படுகிறது.  அந்தவகையில் இயேசு இன்றைய நாளில் நம் அனைவருக்கும் கட்டளை ஒன்றைக் கொடுக்கிறார். அன்புக்கட்டளையைக் கொடுக்கிறார்.

யோவான் நற்செய்தி 13:34 ல் இயேசு, “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்கிறார்.

அன்புக் கட்டளை ஒன்றைப் பிறப்பிக்கிறார்.  அன்பு என்ற வார்த்தையை பலமுறை நாம் கேட்டு கேட்டுப் பழகியதால், அது ஒரு சலிப்புத் தன்மையை நமக்கு ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அன்பைப் பற்றிப் பேசாதவர்கள், எழுதாதவர்கள், கேட்காதவர்கள, தியானிக்காதவர்கள் இருக்க முடியாது. அதனாலோ என்னவோ அது மேலோட்டமாகவே உணரப்படுகிறது.  இயேசுவின் அன்பின் ஆழத்தை நாம் புரிந்து கொள்வது கடினமே.

பணத்துக்கு ஆசைப்பட்டு, தன் குருவையே காட்டிக்கொடுத்த யூதாசையும் அன்பு செய்ய அவரால் முடிந்தது. துன்பத்திற்குப் பயந்து தன்னை மறுதலித்த பேதுருவையும், அதிகாரத்திற்குப் பயந்து தன்னைவிட்டு ஓடிப்போன சீடர்களையும் மீண்டும் தேடித் தேடி சென்று அரவணைக்க முடிந்தது. தன்னை ஈட்டியால் குத்தியவர்களையும் சாட்டையால் அடித்தவர்களையும், தன் ஆடையை அகற்றியவர்களையும், கன்னத்தில் அடித்தவர்களையும், காயப்படுத்தியவர்களையும் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடிந்தது? என்பதை நினைக்கும்போதே நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

எல்லாம் அன்புதான் என்று நாம் பதில் சொன்னாலும் நம்மால் அதனை செய்ய முடியுமா?

தூய பவுல் கலாத்தியாருக்கு எழுதிய திருமுகம் 5: 20-21ல், “பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்” என்று ஒரு பட்டியலிடுகிறார். அதுமட்டுமல்ல, பதவிக்காக, பெருமைக்காக பிரித்தாள்வது, சண்டை மூட்டிவிடுவது, ஏமாற்றுவது, இருபிரிவினரிடையே சமாதானம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது… இவைகளில் ஏதாவது ஒருசில பண்புகள் நம்மிலும் இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்களைத் தீர்ப்பிடுவதைவிட நம்மை நாமே சுய ஆய்வு செய்து பார்க்கும்போது பல அழுக்குகள் இருக்கும். இவ்வளவு இருந்தும் இயேசு நம்மை ஏற்று, அன்பு செய்ய மறுப்பதில்லை. பல நேரங்களில் அவரின் அன்பை அரவணைப்பை குறிப்பாக, நாம் துன்புறும் நேரங்களில், ஆபத்தான காலங்களில், உடல் மன வேதனைகளில், மனிதரின் முயற்சிகள் தோல்வியுற்ற நேரங்களில், தனிமைப்படுத்தப்பட்ட நேரங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். இறைபராமரிப்பை நாம் அனுபவித்திருக்கிறோம். அவர் நம்மைக் கைவிட்டதாக நினைத்ததில்லை. நாம் குறைபாடுள்ளவர்களாக இருக்கும்போதே நாம் இயேசுவால் அன்பு செய்யப்படும்போது, நம் சக மனிதர்களையும் குறைபாடுகளோடு ஏற்று அன்பு செய்வதுதான் சிறப்பாக இருக்கும்.

இயேசுவைப் போல எவ்வாறு அன்பு செய்வது என்று நினைக்கும்போது அது நமக்கு மிகப்பெரிய சவாலாக தோன்றுகிறது. தனிமனித சுதந்திரமும், அறிவியல் வளர்ச்சியின் தாக்கமும் நம்மைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திவிட்டது. சந்தைகளில் மட்டுமே காணப்பட்ட போலிப் பொருள்கள், இன்று உறவிலும் போலி உறவாக மாறிவிட்டது. செயற்கை அரிசி, செயற்கை முட்டை, செயற்கை காய்கறிகள், இதன் வரிசையில் செயற்கைப் புன்னகை, செயற்கை அன்பும் சேர்ந்துவிட்டது. பொய்யாலும் புரளியாலும், வன்முறைகளாலும் ஆண்டுகள் கடந்துகொண்டே செல்கின்றன. இப்பேர்பட்ட சூழலில் இன்று இயேசு நமக்கு அன்புக்கட்டளையைக் கொடுக்கிறார்.

         நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை நாம் அன்பு செய்ய முடியுமா?

         தங்களது தேவைக்காக மட்டுமே நம்மை பயன்படுத்துபவர்களை நாம் அன்பு செய்ய முடியுமா?

         நாம் நல்லதே நினைத்தாலும் செய்தாலும், நம்மைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவோரை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

         தான் செய்த தவறுகளை மறைக்க நம்மீது பழிபோடுபவர்களோடு எவ்வாறு பழக முடியும்?

         பணம், பொருள்களே முக்கியம் என நினைத்து துன்பத்தில் நம்மை விட்டு ஓடிப்போனவர்களை நம்மை ஏற்று அன்பு செய்ய முடியுமா?

         தங்கள் பதவிக்காக, பெருமைக்காக நம்மை பிரித்தாளுபவர்களை, மட்டும் தட்டுபவர்களோடு நம்மால் முழுமனதோடு உறவாட முடியுமா?

இவ்வாறு நம் தனிப்பட்ட வாழ்வில், பிறரை அன்பு செய்வது பெரும் சவாலாக இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதையும் தாண்டி நாம் வாழும் சமுதாய சமூக அரசியல் சூழ்நிலையில் பார்க்கும்போது அன்பு இன்னும் கடினமானதாகவே இருக்கிறது.

         உள்ளூர் அரசியல்  முதல் உலக அரசியல் வரை, அனைத்துமே அடக்குமுறையையும் ஆணவத்தையும் பிரித்தாலும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

         ஒன்றும் அறியாத குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் பலிகடாக்களாக பயன்படுத்துகிறார்கள். தன் சொந்த மக்களையே மொழியால், இனத்தால், மதத்தால், வகுப்பு வாதத்தால் அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள்.

         கல்விப்பணி, சமூகப்பணி, ஆன்மீப்பணி போன்றவற்றிற்கு இடையூறாக, தடைக்கற்களாக உலகமெங்கும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

எனவே நாம் வாழும் அரசியல் சமூக சூழ்நிலையும்கூட நமக்கு இயேசுவின் அன்பை சாத்தியமாக்குவதற்கு ஏற்றதாக இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

அப்படியெனில் இயேசுவின் அன்புக்கட்டளையை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? இயேசுதான் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் செய்து காட்டினார். “நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்று சொல்கிறார். நம்மையும் செய்ய கட்டளையிடுகிறார். சீடர்களின் பாதம் கழுவி பாடம் சொல்கிறார். என் உடல், என் இரத்தம் என்று தன்னையே தியாகம் செய்கிறார்.

      அன்பின் பரிமாணங்களான தாழ்ச்சியை விதைப்போம், ஆணவம் அடங்கும் வரை:

      மன்னிப்பை விதைப்போம், பழிவாங்கும் எண்ணம் மறையும் வரை

      உண்மையை விதைப்போம், போலிகளும், பொய்களும் ஒன்றுமில்லாமல் போகும்வரை

      நீதியையும், நேர்மையையும் விதைப்போம், அநீதி அகற்றப்படும் வரை

      நட்பை விதைப்போம், பகைமை பறந்து போகும் வரை

      ஒற்றுமையை விதைப்போம், பிரிவினை பிரியும் வரை

      நல் எண்ணங்களை விதைப்போம், தீய எண்ணங்கள் தீய்ந்து போகும் வரை

      மொத்தத்தில் அன்பை மட்டுமே விதைப்போம். காரணம் அன்புதான் இயேசு.

அன்பாம் இயேசுவை உலகின் கடைசி எல்லை வரை, உலகம் முடியும் வரை விதைத்துக்கொண்டே இருப்போம். நன்றி  (வத்திக்கான் வானொலியில் உரை வழங்கியவர் - அருள்பணி இலாரன்ஸ் சகாயராஜ், திண்டுக்கல் மறைமாவட்டம்)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.