2018-03-28 15:06:00

இமயமாகும் இளமை - ஏழை மாணவர்களின் தோழர்


சென்னையைச் சேர்ந்த கார்த்தீபன் என்பவர், சமூக சேவையில் ஈடுபடுவதற்காக ஐ.டி. வேலையை விட்டுவிட்டு, முழு நேரமும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்காக ஓடியாடி உழைத்து வருகிறார். சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பது இவரது கனவு. நன்கு படித்து, ஐ.டி. துறையில் வேலை பார்த்தபோது, வார இறுதி நாட்களில் முடிந்தவரை சமூக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார். வேலையில் இருந்துகொண்டே சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுவது கார்த்தீபனுக்குச் சிரமமாக இருக்கவே, ஐ.டி. வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாகச் சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர், மாணவர்களின் நலனுக்காக ‘டீம் எவரெஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார் கார்த்தீபன். ஆரணியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த நூறு குழந்தைகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு, அவர்களுக்கு இலவசமாகக் கல்வி உதவியை வழங்கி வருகிறார். தற்போது ஆரணியில் கிராமப் படிப்பு மையத்தைத் தொடங்கியிருக்கும் கார்த்தீபன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, கணனிப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார். சென்னையில் 12ம் வகுப்பு படித்து முடித்தபின், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல்போன முப்பது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கல்வி உதவித்தொகையையும் வழங்கி வருகிறார். அது மட்டுமல்ல, அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டி வகுப்புகளையும் எடுத்து வருகிறார் கார்த்தீபன். ஆங்கிலம் பேசத் தயங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நேரடியாக மட்டுமல்ல, தினமும் அரை மணி நேரம் தொலைபேசி மூலமாகவும் ஆங்கிலப் பயிற்சியை அளித்து வருகிறார் இவர். “இந்தியாவில் கல்வித்தரம் மிகவும் குறைவு. அதனால் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித் திறனும் குறைவாகவே இருக்கிறது. ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் ஒரு முயற்சியாகத்தான் இந்தத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்” என்கிறார் கார்த்தீபன்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.