2018-03-27 15:38:00

இமயமாகும் இளமை - "நம் உயிர்களுக்காக அணிதிரள்வோம்"


மார்ச் 25, ஞாயிறன்று, கத்தோலிக்க உலகெங்கும், 33வது உலக இளையோர் நாள், மறைமாவட்ட அளவில் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னர், மார்ச் 24, சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெரும்பான்மையான நகரங்களிலும், மும்பை உட்பட, உலகின் பெரு நகரங்கள் பலவற்றிலும், இளையோரின் பேரணிகள் நிகழ்ந்தன. "நம் உயிர்களுக்காக அணிதிரள்வோம்" (March for Our Lives) என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பேரணிகள், இளையோரின் பண்புகளை உலகிற்குப் பறைசாற்றின. இளையோர், ஒற்றுமையுடன் செயல்படுவர் என்பதையும், தீர்க்கமாக, தெளிவாக சிந்திக்கும் திறன் கொண்டோர் என்பதையும், இப்பேரணி தெளிவாக உணர்த்தியது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாணவியர். கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், இஸ்பானியர் என்ற எவ்வித பாகுபாட்டையும் முன்னிறுத்தாமல், அனைவரும் இணைந்து வந்து குரல் எழுப்பியது, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் உயிருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலாக இருக்கும் துப்பாக்கி வன்முறைகளை, அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்ற அறைகூவலுடன், இளையோர் இந்தப் பேரணியை மேற்கொண்டனர்.

வாஷிங்டனில் பேரணி நடைபெற்ற நேரம், இந்தியாவில் சனிக்கிழமை மாலை நேரம். சனிக்கிழமை மாலை துவங்கி, ஞாயிறு முழுவதும், தமிழகத்தின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் விரிவாக்கத்தை எதிர்த்து, பொதுமக்கள், குறிப்பாக, இளையோர், பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். தூத்துக்குடியில் பயிலும் கல்லூரி மாணவர்கள், மார்ச் 26, இத்திங்களன்று, வகுப்புகளை புறக்கணித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் எதிரொலி, இத்திங்களன்று, இலண்டன் மாநகரில் கேட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம், 'வேதாந்தா' என்ற குழுமத்தின் ஓர் அங்கம் என்பதால், வேதாந்தா கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர், அனில் அகர்வால் அவர்களின் இலண்டன் வீட்டுக்கு முன், இந்த போராட்டம் நிகழ்ந்தது. தற்போது நடைபெற்றுவரும் இந்த போராட்டம், மெரினா கடற்கரையில் கூடிய இளையோரையும், அவர்களுக்கு உறுதுணையாக உலகின் பல நாடுகளில் எழுந்த போராட்டங்களையும் நினைவுக்குக் கொணர்ந்தது.

துப்பாக்கி பயன்பாட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், ஒரு சிறுவன், "இன்னும் அதிகமாக புத்தகங்கள் தாருங்கள்; துப்பாக்கிகள் அல்ல" (Give us more books not guns) என்ற வாசகத்தை ஏந்தி நின்றான். அதேபோல், தூத்துக்குடி போராட்டத்தில் ஒரு சிறுவன், "காப்பர் (தாமிரம்) உனக்கு; கான்சர் (புற்றுநோய்) எனக்கா?" என்ற கேள்வி எழுதப்பட்டிருந்த அட்டையைத் தாங்கி நின்றான்.

இளையோரும், சிறாரும், சமுதாய நலனுக்காகப் போராடத் துணிந்திருப்பது, இனி வரும் காலம், இளையோரின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.