2018-03-24 15:11:00

இத்தாலியின் திரெந்தீனோ அமைப்பினரைச் சந்தித்த திருத்தந்தை


மார்ச்,24,2018. திருப்பீடத்தின் பல்வேறு சமூகப்பணிகளில் ஒத்துழைக்கும் மற்றும் உதவிவரும் இத்தாலியின் திரெந்தீனோ (Trentino) அமைப்பு என்றழைக்கப்படும் குழுவினருக்கு தன் நன்றியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியான திரெந்தீனோவிலிருந்து, அப்பகுதி பேராயர் லவுரோ தீசி அவர்களுடன் வத்திக்கானுக்கு வருகை தந்த 110 பேர் கொண்ட குழுவை, இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, இக்குழு, திருப்பீடத்திற்கு, குறிப்பாக, வத்திக்கான் நகர் நிர்வாகத்திற்கு செய்துவரும் உதவிகளுக்காக தன் நன்றியை வெளியிட்டார்.

வத்திக்கான் நாட்டிற்கு  சுற்றுலாப் பயணிகள், மற்றும் திருப்பயணிகளை வரவேற்பது உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, திரெந்தீனோ அமைப்பு உதவிவருவதைப்பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, திரெந்தீனோ பகுதியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கடவுள் நம்பிக்கை, கடின உழைப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடாக இவ்வமைப்பினர் ஆற்றிவரும் உதவிகள் விளங்குகின்றன என்று கூறினார்.

மனம் திறந்த சகோதரத்துவ வாழ்வு, பிறரை ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்ந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி கற்பிக்கும் நன்னெறி மதிப்பீடுகளின் துணிச்சல் மிகுந்த சாட்சிகளாக அனைவரும் வாழவேண்டிய தேவை உள்ளது என்பதையும் தன் சந்திப்பில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.