2018-03-22 15:09:00

திருத்தந்தையின் ஐந்தாண்டு தலைமைப் பணியின் நல்தாக்கங்கள்


மார்ச்,22,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுருவின் 265வது வழித்தோன்றலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு, மார்ச் 13ம் தேதியன்றும், திருத்தந்தை, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிறைவு, மார்ச் 19ம் தேதியன்றும், சிறப்பிக்கப்பட்டன. சலேசிய சபை அருள்பணி இம்மானுவேல் அமல்ராஜ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்த ஓராண்டு நிகழ்வுகளை அலசியதைக் கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று, திருத்தந்தை மக்களில் ஏற்படுத்தியுள்ள நல்தாக்கங்கள் பற்றி இன்று பகிர்ந்து கொள்கிறார். அருள்பணி இம்மானுவேல் அமல்ராஜ் அவர்கள், உரோம் நகரில், அறநெறியியல் துறையில், அறநெறிப் பார்வையில் இறை இரக்கம் என்ற தலைப்பில், தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

நல்தாக்கம் - நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சாட்சிய வாழ்வு, மனித நேயம் செறிந்த வாழ்வு, இரக்கத்தை மையப்படுத்தும் செயல்கள், போதனைகள் மற்றும் போதனைகளுக்கேற்ற செயல்கள் என்னிலும், கிறிஸ்தவ மக்கள் மனங்களிலும், மற்ற மக்கள் நடுவிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு சிலவற்றை தற்பொழுது நான் முன்னிலைபடுத்த விரும்புகின்றேன்.

முதலாவதாக, நம் அனைவரையும் மகிழ்ச்சியின் மக்களாக வாழ அழைக்கிறார். கவலை, பயம் தவிர்த்து எதிர்நோக்குடன் கடவுளிடத்திலே நம்பிக்கை கொண்டு, அவரது அன்பிலே வாழ்ந்தால் மகிழ்ச்சி என்றுமே நிலைக்கும் என்கிறார். திருத்தந்தையின் சிரித்த முகமும், மகிழ்ச்சி நிறைந்த உள்ளமும் இறை இரக்கத்தை முன்னிறுத்தும் சொற்களும், இறை இரக்கத்தை தனது வாழ்விலே முற்றிலுமாக அனுபவித்தபோது உண்டான மகிழ்ச்சி இன்றும், வாடிய, சோர்ந்த, எதிர்நோக்கற்ற உள்ளங்களை தேற்றுவது மக்களிடத்திலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவதாக, இயேசு பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு பரிவிரக்கம் கொண்டார் என்னும் நற்செய்திக்கேற்ப, நமது திருத்தந்தையும் ஏழைகள், நோயுற்றோர், அகதிகள், சிறைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர், குழந்தைகள், கைவிடப்பட்டோர், பெண்கள் குறிப்பாக நுகர்வுப் பொருளாகக் கடத்தப்படும் பெண்கள், கடவுளுடைய மற்றும் திருச்சபையினுடைய இரக்கத்திற்காகவும், மன்னிப்பிற்காகவும் ஏங்கி நிற்கும் மக்கள், தேவையிலிருப்போர், ஒதுக்கப்பட்டோர், அனாதைகள், என சமுதாயத்தின் விளிம்பிலே வாழும் மக்களுக்கு இரக்கத்தையும், அன்பையும், பரிவையும் காட்டுவது அனைவரையும் கவர்வதோடு, அவரைப்; போலவே வாழவும் மக்களைத் தூண்டுகிறது என்றால் அது மிகையாகாது.

மூன்றாவதாக, குடும்பத்திலே அனைத்துத் தலைமுறையினரும் ஒருவர் மற்றவரோடு அன்போடும், பாசத்தோடும் பழகுவதோடு, ஒருவர் ஒருவருக்கு உதவவும் குறிப்பாக உடல் உள்ள நலம் குன்றும் தருணங்களில் முகம் கோணாமல் பணிவிடை செய்யவும்; பணிக்கிறார். ஒரு தலைமுறை மற்ற தலை முறையிடமிருந்து கிறிஸ்தவ நம்பிக்கையிலே வளர்வதற்கான விழுமியங்களையும், மதிப்பீடுகளையும், நற்பண்புகளையும், பக்தி முயற்சிகளையும் கற்று வளர திருத்தந்தை தரும் அறிவுரைகள் அனைத்து மக்கள் மனங்களிலும் என்றும் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நான்காவதாக, இளையோரிடத்திலே திருத்தந்தை காட்டும் தனிப்பட்;ட பேரன்பு போற்றுதற்குரியது. தந்தைக்குரிய பாசத்தோடு அவர்களைப் பார்த்து, ஓ இளைய சமுதாயமே! நீ, திருச்சபையிலும், சமுதாயத்திலும் முக்கிய பங்கை வகிக்கவேண்டும். ஈடுபாடின்றி ஓரமாக நின்று மொளனமாக வேடிக்கை பார்த்தது போதும்! திண்ணையிலும், சொகுசு நாற்காலிகளிலும், அமர்ந்து கைபேசிகளோடு இளமையை சின்னாபின்னமாக்கியது போதும். இளைஞனே! இளம் பெண்ணே! உன்னுடைய வாழ்வை இயங்க வைக்க நான் தரும் கடவுச்சொல்லை (pயளளறழசனயை) பயன்படுத்திப்பார் என பின்வரும் கடவுச்சொல்லைத்; தருகிறார். இளைஞனே, இளம் பெண்ணே நீ உன்னையே ஒவ்வொரு நாளும் கேட்டுப்பார், இறைமகன் இயேசு இன்று என்னுடைய சூழலிலே இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இன்று என்னை எத்தகைய செயல்பாட்டிற்கு அழைக்கின்றார்? திருத்தந்தையைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் இக்கடவுச் சொல்;லை (pயளளறழசன) பயன்படுத்தினால் மாற்றம் நிச்சயம் என உறுதியளிக்கிறார்.  இக்கடவுச் சொல்லை பயன்படுத்திய இளைஞர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதை அனைவருமே வரவேற்றிருக்கும் ஒரு செயல்பாடாகும்.  மேலும் திருத்தந்தை, இளைஞர்களே இளம் பெண்களே! இன்றைய உலகை, ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை எதிர்கொள்ளவும், அவற்றை வெல்லவும் என்ன தீர்வுகளை வைத்திருக்கிறீர்கள்? திருச்சபைக்காக உங்களுடைய பங்கு என்ன? என்பதை உரத்த குரலிலே எனக்குத் தெரியப்படுத்துங்கள் என இளையோரை தனிப்பட்ட விதத்திலே அணுகியிருப்பது திருச்சபையிலே அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் அழைப்பும் அடையாளமும்; என்கிறார்கள் இளைய சமுதாயத்தினர்.

ஐந்தாவதாக, நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு தீர்மானங்களை எடுக்கின்றோம். ஒருசில தீர்மானங்கள் வாழ்க்கையை பாதிக்கின்றன, ஒரு சில முடிவுகள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுகின்றன. எனவே தீர்மானங்களையும், முடிவுகளையும், பகுத்துணர்ந்து, ஆன்மீகவாதிகளை கலந்தாலோசித்து, செபத்திலே அவரவர் மனசாட்சியுடன் தெளிந்து  தேர்வு செய்ய அழைக்கிறார். எனவே தீர்மானங்கள் மனசாட்சியை, தூய ஆவியாரின் செயல்பாட்டை, தெளிந்து தேர்தல் முறையை உள்ளிருத்தியதாக அமைந்திருக்க வேண்டும் என்பதை, தனது வாழ்க்கை வழியாக மாபெரும் பாடம் புகட்டுவது மக்களிடத்திலே இடைவிடா தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காலத்தின் தேவைக்கேற்ப நமக்கு சிறந்த கொடையாக, நம்மை வழிநடத்தும் ஆயனாக, பணியாளருள் பணியாளனாக, சமுதாயத்தின் விளிம்பு நிலைகளிலே வாழும் அனைவரின் எதிர்நோக்காக, இறை இரக்கத்தை பகிர்ந்து வாழும் கருவியாக, இறை அன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் என்றும் பகிர்ந்தளிக்கும் திருத்தந்தையாக பிரான்சிஸ் அவர்களை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார். அவருடைய திருத்தூதுப் பணியும், உலகளாவிய தலைமைத்துவப் பணியும் சிறக்க நாம் ஒத்துழைப்போம். அவர் வழியாய் இறைவன் நமக்களிக்கும் படிப்பினைகளை ஏற்று வாழ்வோம். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவருக்காக நாம் அனுதினமும் செபிப்போம். வாழ்க திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணி இம்மானுவேல் அமல்ராஜ், சலேசிய சபை

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.