2018-03-22 14:35:00

ஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்


மார்ச்,22,2018. பாதுகாப்பற்ற, தூய்மையற்ற தண்ணீரால் உருவாகும் நோய்களால், 700க்கும் அதிகமான குழந்தைகள், ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை, குழந்தைகள் நல ஐ.நா.அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ளது.

மார்ச் 22, இவ்வியாழனன்று, உலக தண்ணீர் நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, யுனிசெஃப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இன்றைய உலகில் 210 கோடி மக்கள் சுத்தமான நீர் இன்றி வாழ்கின்றனர் என்றும், இவர்களில், 2 கோடியே 60 இலட்சம் மக்கள், ஒவ்வொரு நாளும், தண்ணீர் கொணர்வதற்கு, 30 நிமிடங்கள் நடக்கவேண்டியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுத்துவரும் முயற்சியில் குழந்தைகளும் ஈடுபட்டிருப்பதால், அவர்களது கல்வி, விளையாட்டு என்ற பல உரிமைகளை அவர்கள் இழந்துள்ளனர் என்று இத்தாலிய யுனிசெஃப் இயக்குனர் Giacomo Guerrera அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

2017ம் ஆண்டு யூனிசெஃப் அமைப்பு மேற்கொண்ட முயற்சியால், தண்ணீர் மிக அரிதாகக் கிடைக்கும் சூழலில் வாழ்ந்த 3 கோடி மக்கள் பயன்பெற்றனர் என்று, இவ்வமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.