2018-03-21 15:24:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித ஜெரோம் பாகம்1


மார்ச்,21,2018. செபித்து, பின் விவிலியத்தை படிக்கத் தொடங்கு. அதைப் படித்த பின் செபி. விவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறிவதில்லை. எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இரு. கடவுள் வந்து பார்த்தாலும், அலகை சோதிக்க வந்தாலும் நீ சுறுசுறுப்புடன் இருப்பதை காணவேண்டும்” என்று கூறியவர் புனித ஜெரோம். புனித எரோணிமுஸ் என தமிழில் அழைக்கப்படும் இவர், விவிலியத்தை, எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து, நேரடியாக இலத்தீனில் மொழி பெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். பழைய ஏற்பாட்டின் சாலமோனின் ஞானம், சபை உரையாளர், பாரூக்கு, முதல், இரண்டாம் மக்கபேயர் நூல்கள் ஆகியவற்றை ஏற்கனவே திருத்தந்தை தமாசுஸ் அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். இதனைச் சேர்க்காமல், மற்ற 41 நூல்களையும், 18 ஆண்டுகள் உழைத்து இலத்தீனில் மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு 'வுல்காத்தா' அதாவது எளிமையான நடையில் உள்ளது என்ற பொருளில் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிபெயர்ப்பை, அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பாக, திரிதெந்து பொதுச்சங்கம் ஏற்றது. கத்தோலிக்க மறைக்கோட்பாடுகள் தாக்கப்பட்டபோது, அதனைக் கண்டித்தவர் புனித ஜெரோம். குறிப்பாக, அன்னை மரியா எப்போதும் கன்னி அல்ல என்றும், இயேசுவுக்குப் பிறகு, யோசேப்பிற்கு வேறு குழந்தைகளும் உண்டு என்றும் போதித்த ஜொவீனியனை எதிர்த்து நூல் எழுதினார் இவர். எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்த திருமறை நூல்களை மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் இவர் இலத்தீனில் மொழி பெயர்த்தார்.

புனித ஜெரோம் அவர்கள், பற்றி சில சுவையான நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  புனித ஜெரோம் பெத்லகேமில் துறவு மடம் கட்டி பல துறவிகளோடு வாழ்ந்து வந்த சமயத்தில் ஒருநாள் அவர் மற்ற துறவிகளுடன் சேர்ந்து ஒர் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திறந்திருந்த கதவு வழியாக, திடீரென ஒரு சிங்கம் அந்த அறைக்குள் நுழைந்தது. உடனடியாக அலறியடித்துக்கொண்டு துறவிகள் ஓடி ஒளிந்துகொண்டனர். ஆனால் ஜெரோம் மட்டும் தனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்துகொண்டு அந்தச் சிங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிங்கம் அவரை நோக்கி நொண்டி நொண்டி வந்து, முள் குத்தியிருந்த தனது பாதத்தைத் தூக்கிக் காட்டியது. வலியினால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் பாதத்தில் குத்தியிருந்த முள்ளை எடுத்து அந்தக் காயத்துக்கு மருந்து போட்டு வெண்ணீர் ஒத்தடம் கொடுத்து அதைக் குணமாக்கினார் ஜெரோம். சிறிது நாள்களில் அந்தக் காயம் ஆறியது. அதைச் சிங்கத்தின் முகத்திலும் காண முடிந்தது. அதன்பின்னர் சிங்கத்திடம் வாசலைக் காண்பித்துப் போகுமாறு சொன்னார் ஜெரோம். அதுவோ அவர் அருகிலேயே கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு வாலை ஆட்டிக்கொண்டிருந்தது.

இதற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டுமென நினைத்த அவர், மற்ற துறவிகளுடன் ஆலோசித்த பின்னர், அத்துறவு இல்லத்துக்கு விறகு கொண்டுவரும் கழுதைக்குக் காவல் பணி செய்யும் வேலையைக் கொடுத்தார். சிங்கமும் மகிழ்ச்சியோடு தினமும் கழுதைக்குப் பின்னே சென்று பாதுகாப்பாக அதை தினமும் இல்லத்தில் சேர்த்தது. ஒருநாள் கழுதை காட்டில் இருந்தபோது சிங்கம் அயர்ந்து தூங்கிவிட்டது. அவ்வழியே ஒட்டகங்களில் சென்ற வணிகர்கள் கழுதையைப் பிடித்துச் சென்றுவிட்டனர். பின்னர் விழித்துப் பார்த்த சிங்கம் அங்குமிங்கும் அலறியது. கழுதையைக் காணவில்லை. எனவே சோகமாக திரும்பி அத்துறவு இல்லத்துக்குச் செல்லாமல் கோவிலின் முன்பாகத் தங்கிவிட்டது. மற்ற துறவிகளோ, சிங்கம் பசியினால் கழுதையைக் கொன்று சாப்பிட்டிருக்கும் என்று கூறினர். ஆனால் ஜெரோம், அத்துறவிகளிடம், அவசரப்பட்டு தீர்ப்பிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். கழுதையைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்த சிங்கம், அந்த வணிகர்கள் அதே பாதையில் திரும்பி வந்தபோது தனது நண்பர் கழுதை அவர்களின் வாகனத்துக்கு முன்னால் செல்வதைக் கண்டு அந்த வணிகர்களைத் துரத்தியது. பயந்துபோன வணிகர்கள் அருகிலிருந்த துறவியர் இல்லம் வந்து ஜெரோம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். ஐயனே, எங்களை இந்தச் சிங்கத்திடமிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், நாங்கள்தான் கழுதையைத் திருடினோம் என அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், தாங்கள் இந்தப் பக்கமாய் வரும்போதெல்லாம் உங்கள் இல்லத்துக்குத் தாராளமாக உதவி செய்வோம் எனவும் உறுதி கூறினர். பின்னர் அந்தச் சிங்கம், ஜெரோம் அருகில் வந்து கால் கைகளை நீட்டி, தான் செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு வேண்டியது. அந்தச் சிங்கம் ஜெரோம் இறக்கும்வரை அவரைவிட்டு அகலவேயில்லை. அவரைக் கல்லறையில் வைத்தபோது அது கர்ச்சித்து அழுதது. புனித ஜெரோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களில் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. புனித ஜெரோம் படங்களில் அவரருகில் ஒரு சிங்கம் இருப்பது இதனால்தான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.