2018-03-20 16:38:00

புலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு


மார்ச்,20,2018. கிறிஸ்து உயிர்ப்புக் காலத்தில், புலம்பெயர்ந்த மக்களுடன், விசுவாசம், நம்பிக்கை மற்றும், அன்பில் பயணம் மேற்கொள்ளுமாறு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது என்று, அந்நிறுவனத் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்து உயிர்ப்பு விழாவுக்கென செய்தி வெளியிட்டுள்ள, மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னர் தொடங்கி, கல்வாரிக்கு, பாரமான  மரச்சிலுவையைத் தூக்கிச் சென்றதுவரை, இயேசு, தம் வாழ்வில், பல பயணங்களை மேற்கொண்டார் எனவும், இயேசுவின் பயண முடிவு, உண்மையிலேயே ஓர் ஆரம்பமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

புலம்பெயரும் மக்களுக்கும், அவர்களை வரவேற்கும் இதயங்களுக்கும், பயணத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு, நம்பிக்கையே உந்து சக்தியாக உள்ளது என்றும், ஒருவர் ஒருவரின் இதயத்தையும், கலாச்சாரத்தையும், மொழியையும் புரிந்துகொள்வதற்கு, ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், கர்தினால் தாக்லே அவர்களின் செய்தி கூறுகின்றது.

வருகிற ஜூன் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை, பயணத்தைப் பகிர்தல் என்ற தலைப்பில், உலக அளவில் ஒருவார செயல்திட்ட நிகழ்வை, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் நடத்தவுள்ளது என்றும், இந்நிறுவனம், அசாதாரணச் செயல்களை எதிர்பார்க்கவில்லை, சாதாரண சிறுசிறு செயல்களை எதிர்பார்க்கின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள், எந்நிலையில், எந்த வயதைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவளித்து, பாதுகாத்து, அவர்களுடன் பயணம் மேற்கொள்ள, காரித்தாஸ் நிறுவனம் விரும்புகின்றது என்றும், அந்நிறுவனத் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.