2018-03-19 14:45:00

வாழ்வுக்கான தேடுதலில் அச்சமின்றி செயல்படுங்கள்


மார்ச்,19,2018. விவிலிய காலத்தில் இறைவன் இளையோர் வழியாக பேசியதுபோல், இப்போதும் அவர் இளையோர் வழியாக பேசுகிறார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக, இத்திங்களன்று இளையோரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரை மையப்படுத்தி, அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, இவ்வாரம் உரோம் நகரில் இடம்பெறும் இளையோர் கூட்டத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருக்கு ஆற்றிய உரையில், பலவேளைகளில் இளையோரின் முக்கியத்துவத்தை ஒதுக்கி வைக்கும் இன்றைய கலாச்சாரத்தில், அவர்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு அவர்களுக்குரிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

வெட்கமடையாமல், துணிவுடன் விடயங்களை எடுத்துரைக்கும் இளையோரின் கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

நமக்குப் பிடிக்காத எதையும் எவர் பேசினாலும் அவற்றைப் பொறுமையுடன் செவிமடுக்கும் தகுதியைப் பெறுவோம், ஏனெனில், நாம் பேசுவதை மற்றவர் செவிமடுக்கவேண்டும் என்ற உரிமையை நாம் எவ்வளவு எதிர்பார்க்கிறோமோ, அந்த அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதற்கு இருக்கும் உரிமையையும் நாம் மதிக்கவேண்டும் என்றார் திருத்தந்தை.

இளையோர் மீது முழு நம்பிக்கை கொண்டு, அவர்களை அன்புகூரும் இறைவன், தன் முதல் சீடர்களிடம், 'என்ன தேடுகிறீர்கள்' என கேட்டதுபோல் ஒவ்வோர் இளையோரிடமும் கேட்டு, வாழ்வுக்கான தேடுதலில் தன்னுடன் நடக்குமாறு அழைப்பு விடுக்கிறார் என்றார் திருத்தந்தை.

இன்றைய உலகின் நிலைகள் குறித்து எண்ணற்ற இளையோர் தனக்கு கடிதங்கள் எழுதியுள்ளது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரிடையே பணிபுரிய அருள்பணியாளர்கள் அதிக அளவில் தேவை என ஓர் இளைஞர் தனக்கு அனுப்பியுள்ள செய்தியையும் சுட்டிக்காட்டினார்.

இளையோர் ஓவ்வொருவரும் விசுவாசத்திலும் தேடுதலிலும் கொள்ளவேண்டிய ஆர்வத்தை மீண்டும் பெறவேண்டும் எனபதை வலியுறுத்திய திருத்தந்தை, தோல்விகளையும் தாண்டி முன்னோக்கிச் செல்லவேண்டிய பலமும், வருங்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டிய பலமும், தேவைப்படும் இன்றைய இளையோர், இந்நாட்களில், இக்கூட்டத்தில், திறந்த மனதுடன், எவ்வித அச்சமுமின்றி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற விண்ணப்பதையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.