2018-03-19 14:32:00

வாரம் ஓர் அலசல் – இழந்ததை எண்ணி கவலைப்படாமல்..


மார்ச்,19,2018. அது ஒரு மலைப்பகுதி. அங்கு ரின்சாய் என்ற புகழ்பெற்ற ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். உண்மையான மகிழ்ச்சியைத் தேடி அலைந்த இளையவர் ஒருவர் அவரிடம் சென்று, குருவே, நான், வெகுதூரத்திலிருந்து வருகிறேன் என, தன் தேடலை விளக்கத் தொடங்கினார். சரி சரி... நீ இப்போ பீகிங்கிலிருந்து வர்றதினாலே.. நான் உன்கிட்டேயிருந்து சில விடயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.. பீகிங்லே அரிசி விலை எப்டி இருக்குன்னு சொல் என்று கேட்டார் ஞானி. இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத இளையவர் திகைத்தார். ஒரு ஞானிக்கும், அரிசி விலைக்கும் என்ன தொடர்பு என நினைத்த இளையவர், ஞானியிடம் மெதுவாக இப்படிச் சொன்னார். குருவே, என்னை மன்னிக்கனும். மரியாதைக்குறைவா பேசுறேன்னு நினைக்காதீங்க... இதுமாதிரி கேள்விகளை இனிமே என்கிட்ட கேட்காதீங்க.. ஏன்னா.. என்கிட்ட எந்தக் கடந்த காலமும் இல்ல.. நான் கடந்துவந்த பாதைகளை மறந்துட்டேன், ஏறிவந்த ஏணிகளை உதறித் தள்ளிட்டேன். இறந்த காலத்தைப் பொருத்தவரை நான் இறந்து போனவன் என்றார். இதைக் கேட்ட ஞானி, இளையவர் அருகில் வந்து அவர் தோளைத் தட்டிக் கொடுத்து, சபாஷ், இனிமே நாம் உண்மையைப் பத்திப் பேசுவோம். நீ கடந்தகாலச் சுமைகளைத் தூக்கிக்கிட்டு இருக்கிறீயா என அறியத்தான் அரிசி விலை என்னன்னு கேட்டேன். கடந்த காலத்தைப் பற்றிக் கொண்டிருப்பவரால் உண்மையையோ, மகிழ்ச்சியையோ உணர முடியாது எனச் சொன்னார்.

உண்மையான மகிழ்ச்சி என்பது, கடந்தகாலச் சுமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதில் கிடைப்பதாகும். எதை இழந்தாலும், இழந்ததைப் பற்றிக் கவலைப்படாமல், மீதம் என்ன இருக்கின்றது என்று பார்த்து முன்னோக்கிச் செல்வதில் கிடைப்பதாகும். இழந்ததை எண்ணி வருந்திக்கொண்டிராமல், இருப்பதைப் பார்த்து, திருப்தி அடைவதில் கிடைப்பதாகும். பார்வைக் குறையுடைய ஐ.ஏ.எஸ் அதிகாரி பெனோ செபின் (Beno Sebin) அவர்கள் சொன்னார் - “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதைவிட, எது இருக்கிறதோ அதை நினைத்து மகிழ்ச்சியடைந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்” என்று. சென்னை, லிட்டில் ப்ளவர் பார்வைக்குறையுடையோர் பள்ளியில் படித்த பெனோ செபீன் அவர்கள், தனது குறையை ஒரு பொருட்டாகக் கருதி முடங்கிவிடாமல் முயன்று படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். பிபிசி பன்னாட்டு ஊடகத்தில் பணியாற்றும் மூத்த செய்தியாளராகிய எல்லிஸ் பால்மெர் (Ellis Palmer) அவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி. முழு நேரமும் சக்கர நாற்காலியில் இருக்கும் இவர், 15 விதமான பணிகளில், தன் திறமைகளை அசத்தி வருகிறாராம். மார்ச் 14, கடந்த புதன்கிழமையன்று காலமான, நவீன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று போற்றப்படும், அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் பற்றி, எல்லிஸ் பால்மெர் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

மாற்றுத்திறனாளியாகிய என்னைப் போன்றவர்களுக்கு, ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், ஒரு தூண்டுதலாக இருக்கின்றார். அவர், எதை இழந்தாலும், இழந்ததைப் பற்றிக் கவலையடையாமல், மீதம் என்ன இருக்கின்றது என்று பார்க்க வைக்கின்றார்.. என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள், குறைகளை நினைத்து முடங்கிவிடாமல், மேலும் மேலும் முன்னேறிச் செல்வதற்கு ஓர் உந்து சக்தியாக இருக்கின்றார்... என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் பால்மெர். இந்நவீன யுகத்தில், பன்னாட்டு ஊடகங்களும், வர்த்தக அரசியலும், நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து விழுந்து எழுந்து நாம ஓடிக்கொண்டிருக்கிறோம். என்றாவது ஒருநாள், எழமுடியாத அளவிற்கு ஒரு பெரும் பள்ளம் தோண்டப்படுவதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டியநிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் எதைக்கண்டும் மனம் தளர்ந்துவிடாமல், கடந்ததை கடந்தகாலத்திலே விட்டுவிட்டு, நிகழ்காலத்தில் கவனம் செலுத்தத் தூண்டுதலாய் விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். 1963ம் ஆண்டில், தனது 21வது பிறந்த நாளுக்குச் சில நாட்கள் சென்று, அவருக்கு Amyotrophic Lateral Sclerosis என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மிஞ்சிப்போனால் மூன்று ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பார் என்றும் கூறினார்கள். கடுமையான மன இறுக்கத்துக்கு ஆளானார் ஹாக்கிங். தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக ஹாக்கிங் அவர்களுக்குக் கனவெல்லாம் வந்ததாம். தனது தசை மீதான கட்டுப்பாட்டை ஹாக்கிங் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தாலும், குறுகிய தூர நடை, எளிய வேலைகள், உடை மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களைக் கொஞ்சம் சிரமப்பட்டு அவரால் செய்ய முடிந்தது. அந்நிலையில் வாழ்வதற்கு ஒரு புது நோக்கத்தை அவர் உணர்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. உலகம் வியக்கும் அறிவியல் மேதையான  ஹாக்கிங் அவர்கள் மரணத்தைப் பார்த்து பயந்தவரில்லை. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் வாழ வழிவகுப்பேன். மரணம் நெருங்கிவரும்போதுதான், இந்த வாழ்க்கை, வாழத் தகுந்தது என்றும், நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக உள்ளன என்றும் உங்களுக்குப் புரியும்” என்று சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். கடந்த டிசம்பர் 31ம் தேதி, புத்தாண்டு பிறக்கும்முன் இவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘‘நம் பேராசையாலும் அறிவின்மையாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். நிச்சயம் இன்னும் நூறு ஆண்டுகளுக்குமேல் இந்தப் பூமி தாங்காது. காலநிலை மாற்றம் உலகில், அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. உலகம் வெப்பமயமாதலை இப்போதே குறைக்கவில்லை என்றால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதுதான் உலகம் அழிய முதல் காரணமாக இருக்கும். இயற்கையால் அழியும் உலகம், மனிதர்களாலும் அழியும். எதிர்காலத்தில் நடக்கும் அணு ஆயுதப் போர் கண்டிப்பாக உலக அழிவிற்கு காரணமாக இருக்கும். Artificial intelligence (AI) எனப்படும் ரோபோ தொழில்நுட்பம்தான் உலக அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள், மனித அழிவிற்கு கண்டிப்பாக காரணமாக இருக்கும். தற்போது ASIMO வகை (Advanced Step in Innovative Mobility) ரோபோக்கள் புழக்கத்தில் இருக்கின்றன, இதற்கு அடுத்து வரும் ரோபோக்கள் உலகை ஆளும். மேலும், உலகில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் மக்கள் தொகையும் உலக அழிவிற்கு காரணமாக இருக்கும்.

முன்னேற, வெற்றி பெற, சாதிக்க, மகிழ்வாய் வாழ, உடல் பாதிப்புகள் தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங். உலகின் தலைசிறந்த அறிவியலாளரான இவர், சிறந்த மனித நேயமுள்ளவர். உலகில் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும். என் நாட்டில், எனக்கு இலவச மருத்துவ வசதி கிடைத்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது என்று இவர் சொல்லியுள்ளார். இஸ்ரேலில் கலந்துகொள்ள வேண்டிய அறிவியல் மாநாட்டை, பாலஸ்தீனியர்களுக்கு நடந்த அநீதிகளுக்காகப் புறக்கணித்தவர் இவர். வியட்நாம் போர், ஈராக் போர் போன்ற பல அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்தவர் இவர். பேடன்ட், காப்பிரைட் யுகத்தில்,  ‘‘என் ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றிப் போய்ச் சேர வேண்டும்’’  என்று சொன்ன பண்பாளர் ஸ்டீபன் ஹாக்கிங். 2001ம் ஆண்டில், 16 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தபோது, இந்தியர்கள், கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் மிக திறமைசாலிகள் என்று, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களைச் சந்தித்தபோது மகிழ்ச்சியாக கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங். அன்பு இதயங்களே, மார்ச் 20, உலக மகிழ்ச்சி நாள். மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2013ம் ஆண்டிலிருந்து ஐ.நா. நிறுவனம் இந்த உலக நாளைக் கடைப்பிடித்து வருகிறது. உண்மையான உள்ளார்ந்த மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது. இதை வெளியே தேட முடியாது. வேறு யாராலும் கொடுக்க முடியாது. இது கடைச்சரக்கும் அல்ல, விலை கொடுத்து வாங்குவதற்கு. லூச்சியுஸ் செனேக்கா அவர்கள் சொன்னார் – உண்மையான மகிழ்ச்சி என்பது, நிகழ்காலத்தை அனுபவிப்பதாகும். மனப்பதட்டமின்றி எதிர்காலத்தைச் சார்ந்திருப்பதாகும் என்று. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் போன்று, கடந்ததை மறந்து, விரும்புவதைச் செய்து, செய்வதை விரும்பி, நிகழ்காலத்தில் வாழ்ந்தால், வாழ்வு என்றும் சுகமானதே, அது வாழத் தகுந்ததே. எனவே அது இல்லை, இது இல்லை, அது குறை, இது குறை என்ற முறைப்பாடுகளைத் தவிர்த்து, இழந்ததையும், கடந்ததையும் எண்ணி வருந்தாமல், அடுத்து ஆக வேண்டியதைச் சிந்தித்து அதில் கவனம் செலுத்தினாலே வாழ்வு மகிழ்ச்சியாக அமையும். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை. தன் பிள்ளைகளின் மகிழ்வான வாழ்வுக்காகத் தங்களையே அர்ப்பணிக்கும் அப்பாக்களையும், இந்நாளில் (உலக தந்தை நாள், மார்ச் 19) வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.