2018-03-19 14:20:00

இமயமாகும் இளமை : வாழ்வை வளமாக்கியவர்களுக்கு நன்றி


அன்று மூன்று வயதில் நிராதரவாய் நின்றுகொண்டிருந்த அதே இரயில் நிலையத்தில், இன்று அதிகாரியாக கம்பீரமாக நடந்து வந்தார், 22 வயது இளம்பெண் கீதா. 1998ம் ஆண்டில் ஒருநாள், மூன்று வயது சிறுமி கீதா, கேரளாவின் திருச்சூர் இரயில் நிலையத்தின் மூன்றாவது நடைபாதையில், கைவிடப்பட்டு, பசியால் மயங்கிக் கிடந்தார். சாலக்குடியில் அப்போஸ்தலிக்க கார்மேல் சபையினர் நடத்தும் ASHA DEEP அறக்கட்டளை அருள்சகோதரிகள் இச்சிறுமியைப் பார்க்க நேர்ந்தது. சரியாகக்கூட பேசமுடியாத நிலையில் இருந்த இச்சிறுமியை அரவணைத்த அச்சகோதரிகள், சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுத்து, அவள் பற்றி விசாரித்தனர். அப்போது அச்சிறுமியின் அருகே வந்த ஒருவர், இவள் எனது மகள் கீதா. தமிழகத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை தேடி வந்தேன். இங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால், மகளை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டேன் என்றார். நிலைமையை உணர்ந்த அச்சகோதரிகள் தங்குவதற்கு இடம் கிடைக்கும்வரை, கீதா எங்கள் பராமரிப்பில் இருக்கட்டும் என்று கேட்டதற்கு, கீதாவின் தந்தையும் சம்மதித்தார். எனவே, அவர்கள், சிறுமியை ஆஷாதீப் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் தந்தை அங்கு வந்து மகளைப் பார்த்தார். அதன்பின்னர் இன்றுவரை அவர் தன் மகளைத் தேடவே இல்லையாம். இந்நிலையில் ஆஷாதீப் நிர்வாகம் கீதாவை நன்கு படிக்க வைக்க முடிவு எடுத்து, கல்விக் கற்றுக்கொடுக்க, மேரி என்ற ஆசிரியரை நியமித்தது. கீதா, கூடைப்பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டியதை அறிந்த நிர்வாகம், கூடைப்பந்து பயிற்சியாளர் ஒருவரையும் நியமித்தது. படிப்பு, விளையாட்டு ஆகிய இரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றார் கீதா. கூடைப்பந்து விளையாட்டில், கேரளாவுக்கும், இந்தியாவுக்கும் பதக்கங்கள் குவித்தார் கீதா. கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து, வரலாற்று இயலில் முதல் வகுப்பில் தேர்வான கீதா, மலையாளம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் நன்கு கற்றார். விளையாட்டு மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன், இரயில்வே தேர்வு எழுதினார் அவர். தேர்வில் வெற்றி பெற்ற கீதா, கவுகாத்தியில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். தற்போது, திருச்சூர் இரயில் நிலையத்திற்கே அதிகாரியாகப் பணியாற்ற வந்துள்ளார். கீதா சொல்கிறார் – எனது பூர்வீகம் தமிழகம். எனது தாத்தாவுடன் ஏற்பட்ட தகராறில், எனது தந்தை, என்னை மட்டும் அழைத்துக்கொண்டு திருச்சூர் வந்தார். இங்கு வந்த இரண்டாவது நாளில் இருந்து அவர் மாயமாகி விட்டார். எனது தாய், தந்தை முகம் நன்கு நினைவில் உள்ளது. அவர்கள் தமிழகத்தில் எங்கு உள்ளனர் என்றுதான் தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் அவர்களைக் கண்டுபிடித்து விடுவேன். தொண்டுள்ளம் கொண்ட அன்பும் கருணையும் நிறைந்த அருள்சகோதரிகளுக்கு நன்றி. திருவண்ணாமலையைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஜெயகுமார் என்பவரை, மார்ச் 22ம் தேதி திருமணம் செய்ய ஊருக்குச் செல்கிறேன் என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.