2018-03-17 14:11:00

இமயமாகும் இளமை – கனவு விதைகளை வளர்ப்பது உங்கள் பொறுப்பு


உலக அமைதி எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வாழ்ந்தனர், ஓர் இளைஞனும், இளம் பெண்ணும். ஆனால், இவ்வுலகம், ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறதே என்ற விரக்தியினால் மன அமைதியை இழந்து தவித்தனர். இருவரும் ஒருநாள், ஒரு கடைக்குச் சென்றனர். அந்தக் கடை சற்று வித்தியாசமாக இருந்தது. கடையின் உரிமையாளர் இயேசு என்பதை இருவரும் உணர்ந்து, அவரிடம் சென்று, "இங்கு நீங்கள் என்ன விற்கிறீர்கள்?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், "உங்களுக்கு விருப்பமான அனைத்தும் இங்கு உள்ளன. நீங்கள் கடையைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

இளைஞனும், இளம்பெண்ணும் கடை முழுவதும் சுற்றினர். அவர்கள் விரும்பித்தேடிய பல பொருள்கள் அங்கிருந்தன. அமைதியான உலகம், பசியில்லாத பூமி, போரற்ற சமுதாயம், சுத்தமான காற்று, தெளிந்த நீர், அன்பு நிறைந்த குடும்பம் என்று அவர்கள் ஏங்கித்தவித்த அனைத்தும் அந்தக் கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தாங்கள் அதுவரை வாழ்வில் தேடிவந்த அனைத்தும் தங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்ற ஆவலில், அக்கடையில் இருந்த அனைத்து நலன்களையும் குறித்துக்கொண்டு, இருவரும் இயேசுவிடம் திரும்பிச்சென்றனர்.

அவர்கள் தந்த பட்டியலைக் கண்ட இயேசு, புன்னகையோடு ஒரு சில பொட்டலங்களை அவர்களிடம் தந்தார். "இவை என்ன?" என்று அவர்கள் கேட்டபோது, இயேசு, "இவை அனைத்தும் விதைகள்" என்று சொன்னார். புரியாமல் அவரைப் பார்த்த இருவரிடமும் இயேசு, "இது கனவுகளின் கடை. நீங்கள் குறித்து வந்த கனவுகள் அனைத்திற்கும் தேவையான விதைகள், இந்தப் பொட்டலங்களில் உள்ளன. இவற்றை விதைத்து, வளர்ப்பது உங்கள் பொறுப்பு" என்று இயேசு சொன்னார். தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கனவுகள், 'ரெடிமேட்' நிலையில் கிடைக்காது, அவற்றை நட்டு வளர்ப்பது தங்கள் கடமை என்பதை இருவரும் உணர்ந்தனர்.

அவர்கள் கடையைவிட்டுக் கிளம்பும்போது, இயேசு அவர்களிடம், "ஓ, ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்தக் கனவுகளை விதைப்பதும், வளர்ப்பதும் மட்டுமே உங்கள் பொறுப்பு. இவற்றின் பலன்களை அடுத்தத் தலைமுறையினரே அனுபவிக்கப் போகின்றனர்" என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.