2018-03-14 15:33:00

"திருத்தந்தை பிரான்சிஸ், சொல்வதைச் செய்பவர்" - ஆவணப்படம்


மார்ச்,14,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, இச்செவ்வாயன்று தன் தலைமைப்பணியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, "திருத்தந்தை பிரான்சிஸ், சொல்வதைச் செய்பவர் (Pope Francis - A Man of His Word)" என்ற தலைப்பில், உருவாக்கப்பட்டுள்ள ஓர் ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

Ernst Wilhelm Wenders, அல்லது, சுருக்கமாக, Wim Wenders என்றழைக்கப்படும் ஜெர்மன் நாட்டு திரைப்பட இயக்குனர் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பார்வையாளர்களுடன் நேரில் பேசுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.

சமுதாய நீதி, புலம் பெயர்தல், குடும்பங்களின் பங்கு, சுற்றுச் சூழல் என்ற பல கருத்துக்களில், குழந்தைகள், இளையோர், விவசாயிகள், தொழிலாளர்கள், முதியோர் என்று பலரும் எழுப்பும் கேள்விகளுக்கு, திருத்தந்தை வழங்கும் பதில்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுள்ள பல திருத்தூதுப் பயணங்கள், இத்தாலியில் அவர் மேற்கொண்ட மேய்ப்புப்பணி சந்திப்புக்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் அவர் மேற்கொண்ட செயல்பாடுகள், குறிப்பாக, பல நாடுகளில் சிறைப்பட்டோருடன் அவர் மேற்கொண்ட சந்திப்புக்கள் ஆகியவை, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இத்திரைப்படத்தின் இயக்குனர் Wenders அவர்கள் செய்தியாளர்களிடம் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோது, தனக்கு வத்திக்கானில் வழங்கப்பட்ட சுதந்திரத்தைக் குறித்து மகிழ்வும், வியப்பும் அடைந்ததாகக் கூறினார்.

Focus Features என்ற நிறுவனம், இந்த ஆவணப்படத்தை, உலகின் பல நாடுகளில் இவ்வாண்டு மேமாதம் 18ம் தேதி திரையிடுகிறது. மார்ச் 13, இச்செவ்வாயன்று இத்திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) வத்திக்கானில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.