2018-03-13 15:08:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 8


இயேசு வாழ்ந்த காலத்தில், ஒரு யூதக் குடும்பத்தில், பெண் குழந்தை பிறந்ததும், அக்குடும்பத் தலைவன், தன் மகளின் திருமணத்திற்குத் தேவையானவற்றை தயாரிக்கத் துவங்குவார். அவரது தயாரிப்புக்களில், மிக முக்கியமானது, திருமண விருந்தில் பரிமாறப்பட வேண்டிய திராட்சை இரசத்தை கவனமாகச் சேகரிப்பது. ஒவ்வோர் ஆண்டும், தன் குடும்பத்திற்கென தயாரிக்கப்படும் அல்லது வாங்கப்படும், திராட்சை இரசத்தில் ஒரு கலயத்தை தேதியிட்டு, தன் மகளின் திருமணத்திற்கென, பத்திரமாகப் பாதுகாப்பார், தந்தை. அன்றைய வழக்கப்படி, பெண்களுக்கு 16 அல்லது, 17 வயதில் திருமணம் நிகழ்ந்தது. எனவே, மகளின் திருமணத்திற்கு முன்னதாக, அவரது தந்தை, குறைந்தது, 16 அல்லது 17 கலயங்களில் திராட்சை இரசத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

பல ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் திராட்சை இரசம், உயர்ந்த தரமானதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே, மகளின் திருமண விருந்தில், 16 அல்லது, 17 ஆண்டுகளுக்கு முன் பத்திரப்படுத்தப்பட்ட உயர்தரமான திராட்சை இரசத்தை, முதலில் விருந்தினர்களுக்கு வழங்கி பெருமையடைந்தார் தந்தை. அதைத் தொடர்ந்து, 15, 14 என்று ஆண்டுகள் குறிக்கப்பட்ட கலயங்களிலிருந்த இரசம் பரிமாறப்பட்டது. விருந்தினர் அனைவரும் திராட்சை இரசத்தை திருப்தியாகச் சுவைத்தபின், இன்னும் தேவைப்பட்டால், மணமகளின் தந்தை, அண்மைய ஆண்டுகளில் பத்திரப்படுத்தி வைத்திருந்த, மிதமான தரமுள்ள இரசத்தை, விருந்தினருக்குத் பரிமாறுவது வழக்கம்.

கானா திருமணத்தில், இந்த வழக்கத்திற்கு நேர் மாறாக, திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. இறுதியில் பரிமாறப்பட்ட இரசம், அதாவது, புதுமையாகத் தோன்றி.ய இரசம், மிக உயர்ந்த தரமாக இருந்தது. தரமான இரசத்தைப் பரிமாறவில்லை என்பதை, பந்தி மேற்பார்வையாளர், ஒரு குற்றச்சாட்டாக, மணமகனிடம் கூறினார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார்.

யோவான் 2: 9-11அ

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.

கானா திருமணத்தில் இயேசு செய்த முதல் அரும் அடையாளம், உலக வழக்கில் நிலவி வந்த ஒரு சில கண்ணோட்டங்களை, தலைகீழாக புரட்டிப்போட்டது. உலகக் கண்ணோட்டத்தில், மையமாகக் கருதப்பட்டவை, ஓரமாகவும், ஓரங்களாகக் கருதப்பட்டவை, மையமாகவும் மாறின. அதாவது, திருமண வைபவத்தில், முக்கியமான இடம் பெறாத தண்ணீர் தொட்டிகளும், பணியாளர்களும் இயேசு ஆற்றிய புதுமையின் மையங்களாயினர். இதை, சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். அதேபோல், பொதுவாக, நம் விழாக்களில், கூட்டங்களில், உயர்தரமானவர்கள், பேரும் புகழும் பெற்றவர்கள் என்று கருதப்படுவோர் முன் வரிசைகளிலும், எளியோர் பின்வரிசைகளிலும் இடம்பெறுவர். முதலில் நல்லவை, பின்னர், சராசரிகள், இறுதியில் தரம் குறைந்தவை என்பதே உலகம் வகுத்துள்ள அளவுகோல். ஆனால், இறைவனின் கணிப்பில், இறுதியில் வருபவை மிகச் சிறந்தவையாக இருக்கும் என்பதை, இந்த விருந்தின் இறுதியில் வழங்கப்பட்ட சுவை மிகுந்த, தரமான, திராட்சை இரசம் உணர்த்துகிறது.

முதல், கடைசி என்று உலகம் நிர்ணயிக்கும் எண்ணங்களை, இயேசுவின் போதனைகளும், செயல்களும் புரட்டிப் போட்டன என்பதை, நற்செய்தி முழுவதிலும் நாம் காண்கிறோம். இக்கருத்தை, இயேசு, 'திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை'யில் (மத்தேயு 20: 1-16) மிகத் தெளிவாகச் சொல்லித்தருகிறார். இவ்வுவமையின்படி, இறுதி ஒருமணி நேரமே உழைத்தவர்கள், முதலில் வந்து, நாள் முழுவதும் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் கூலியான ஒரு தெனாரியம் நாணயத்தைப் பெறுகின்றனர். நாள் முழுவதும் உழைத்தவர்களுக்குப் போட்டியாக இவர்கள் வந்து முதலிடம் பெற்றனர் என்றோ, பல மணி நேரங்கள் உழைத்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கூலியை இவர்கள் போட்டியிட்டுப் பறித்துச் சென்றனர் என்றோ இயேசு கூறவில்லை.

உழைத்தவர்கள் அனைவருக்கும் சமமான, நியாயமான கூலி வழங்கப்படுகிறது. அதுவும், இறுதியில் வந்தவருக்கு அந்தக் கூலி முதலில் வழங்கப்படுகிறது. நீதியும், சமத்துவமும், ஒருவரது தகுதியின் அடிப்படையிலோ, போட்டியின் அடிப்படையிலோ கிடைப்பதல்ல, மாறாக, இறைவனின் கருணையால், தாராள மனதால் கிடைப்பன என்பதை, இயேசுவின் இந்த உவமை ஆணித்தரமாக கூறுகின்றது. இவ்வுவமையின் இறுதியில், முதல், கடைசி என்ற சொற்களுடன் இயேசு வரையறுக்கும் உலகம், பாகுபாடுகள் நிறைந்த உலகிலிருந்து மாறுபட்ட, ஒரு சமத்துவ உலகை சித்திரிக்கிறது. "இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். (மத்தேயு 20: 16) இன்னும் சில சூழல்களில், இயேசு, இதே கருத்தை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தியுள்ளார் (மத்தேயு 19:30; மாற்கு 10:31; லூக்கா 13:30).

நல்லவை முதலிலும், தரம் குறைந்தவை பின்னரும் வரவேண்டும் என்று உலகம் சொல்லும் கருத்திற்கு மாற்றாக, இறைவனின் கருணையால், இறுதியில் வருவதே, உன்னதமாக இருக்கும் என்பதை உணர்த்தும் இந்தப் புதுமை, நம் வாழ்வின் இறுதியில் வரும் மறுவுலக வாழ்வைப் பற்றியும் நம்மை எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது. மரணம், அதன்பின் வரும் மறுவாழ்வு, இறைவனின் இல்லம் இவற்றைப்பற்றி பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். மின்னஞ்சலில் வலம்வரும் ஒரு கதை, இறுதியில் வருவது இணையற்ற கொடை என்ற கருத்தை உணர்த்துகிறது. இதோ அக்கதை:

இளம் பெண் ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் ஒரு வாரம் வாழ்வதே கடினம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். செய்தி கேட்டு, அந்த இளம்பெண் மனமுடைந்து போனாலும், விரைவில் தெளிவு பெற்றார். தன் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையானவற்றை அவரே முடிவு செய்தார். பங்கு அருள்பணியாளரை அழைத்து, தன் முடிவுகளைத் தெரிவித்தார்.

தன் அடக்கத் திருப்பலியில் என்னென்ன வாசகங்கள் வாசிக்கவேண்டும், தனக்குப் பிடித்தமான பாடல்கள் என்னென்ன பாடவேண்டும் என்று அவரிடம் கூறினார். அவற்றையெல்லாம் பங்கு அருள்பணியாளர் குறித்துக் கொண்டார்.

அவர் கிளம்பும் நேரத்தில், அந்த இளம்பெண் அவரிடம், "சாமி, ஒரு முக்கிய விஷயம்..." என்றார். அருள்பணியாளர் நின்றார். "என்னைச் சவப்பெட்டியில் வைத்தபின், என் வலது கையில் ஒரு முள்கரண்டியையும் வைக்கவேண்டும்" என்று அந்தப் பெண் சொன்னதும், அருள்பணியாளர் குழப்பத்துடன், ஆச்சரியத்துடன் அப்பெண்ணைப் பார்த்தார். இளம்பெண் தன் புதிரை விளக்கினார்:

"என் பாட்டி என்னிடம் ஒரு அனுபவத்தைக் கூறி, அதன் கருத்தையும் கூறினார். நானும் என் நண்பர்கள் மத்தியில் இந்த கருத்தை அடிக்கடி கூறியுள்ளேன். பாட்டி எனக்குச் சொல்லித் தந்தது இதுதான். விருந்து நடக்கும்போது, நாம் சாப்பிட்ட தட்டுகளை எடுத்துச் செல்வர். அப்போது, 'Keep the fork' அதாவது, 'உங்கள் முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்'  என்று யாராவது சொன்னால், ஒரு தனி ஆனந்தம் உண்டாகும். அதாவது, இன்னும் சுவையுள்ள உணவு வகைகள் வரவிருக்கின்றன என்பதன் மறைமுகமான அறிவிப்பே 'முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்' என்ற அன்புக் கட்டளை. வாழ்க்கையோடு இந்த அனுபவத்தை ஒப்புமைப்படுத்தி, 'நல்லவை இன்னும் வரும்' என்ற எதிர்பாப்புடன் வாழ்வதே, மகிழ்வான வாழ்க்கை என்று, என் பாட்டி எனக்குச் சொல்லித்தந்தார். நான் சவப்பெட்டியில் படுத்திருக்கும்போது, என் கையில் உள்ள முள்கரண்டி, பலரை வியப்படையச் செய்யும், அவர்கள் உள்ளத்தில், கேள்வியை எழுப்பும். அவர்களுக்கு நீங்கள் இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்.... 'நல்லவை இன்னும் வரும், அதனால், முள்கரண்டியை வைத்திருங்கள்' என்று நான் சொன்னதாக, என் அடக்கத்திற்கு வரும் அனைவருக்கும் தயவுசெய்து சொல்லுங்கள் சாமி..." என்று அந்த இளம்பெண் விளக்கியபோது, பங்குத்தந்தையின் கண்களில் கண்ணீர் மல்கியது.

தான் பல ஆண்டுகள் மரணத்தைப் பற்றி படித்தது, சிந்தித்தது, தியானித்தது எல்லாவற்றையும் விட, அந்த இளம் பெண் மரணத்தைப்பற்றி சொன்ன அந்த எளிய, அற்புதமான எண்ணங்கள், பங்கு அருள்பணியாளரை அதிகம் பாதித்தன. 'நல்லவை இன்னும் வரும், எனவே முள்கரண்டியை வைத்திருங்கள்' என்ற ஒரே ஒரு செய்தியை, அந்தப் பெண்ணின் அடக்கத் திருப்பலியில், பங்கு அருள்பணியாளர், மறையுரையில் சொன்னார். கேட்ட அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இளவயதிலேயே அந்தப் பெண்ணை இழந்ததால் உண்டான சோகமும், அந்தப் பெண் விட்டுச் சென்ற செய்தியின் ஆழத்தை உணர்ந்ததால் உண்டான மகிழ்வும், அவர்கள் கண்ணீரில் கலந்திருந்தன.

கானா திருமணத்தில், இறுதியில் வழங்கப்பட்ட தரம் மிகுந்த திராட்சை இரசம், எந்தச் சூழலிலும், இறுதியில், நல்லவை நம் வாழ்வில் வந்துசேரும் என்ற நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.