2018-03-11 09:56:00

கருணைக் கொலைக்கு எதிராக இந்திய கத்தோலிக்கத் திருஅவை


மார்ச்,10,2018. தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளர்கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களை கருணைக்கொலை செய்வதற்கு, இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளவேளை, எல்லா வகையான கருணைக் கொலைகளுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, இந்திய கத்தோலிக்கத் திருஅவை.

இந்திய உச்ச நீதிமன்றம், கருணைக்கொலையை அனுமதித்து, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள தீர்ப்பையொட்டி, ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர், அருள்பணி ஸ்டீபன் பெர்னான்டோ அவர்கள், கருணைக்கொலைக்கு ஆதரவாகத் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை, திருஅவை புறக்கணிக்கின்றது என்று தெரிவித்தார்.

கருவையோ, கருவில் வளரும் குழந்தையையோ, வயது வந்தவரையோ, வயதானவரையோ, தீராத நோயால் துன்புறுவோரையோ அல்லது இறந்துகொண்டிருக்கும் மனிதரையோ, யாராய் இருந்தாலும், அப்பாவி மனித உயிர்களைக் கொலை செய்வது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது என்று கூறினார், அருள்பணி ஸ்டீபன் பெர்னான்டோ.

மேலும், கருணைக்கொலையை சட்டமுறைப்படி அங்கீகரிப்பது, இறப்பது நல்லது என்ற சோதனைக்கு உட்படும் மனிதர்கள் உட்பட, நலிந்த மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்திய ஆயர் பேரவை எச்சரித்துள்ளது.

தீராத நோய் உடையவர்கள் மற்றும், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளர்களை, விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, ‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் ஒன்று செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நான்கு நீதிபதிகளும், நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், கருணைக்கொலை என்ற விடயத்துக்கு அனைவரும் அனுமதி அளித்துள்ளனர்.

தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளர்களை, அவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ள, உயிர்காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம். வாழ்வதற்கு விருப்பம் இல்லாத ஒரு மனிதர், செயலற்ற, முடங்கிய நிலையில் துன்புற வேண்டிய அவசியம் இல்லை. தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி, தான் இறக்க விரும்புவதை முன்கூட்டியே உயிலாக எழுதுவதும், அவர்களை கருணைக்கொலை செய்வதும், இத்தீர்ப்பில் அனுமதிக்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.