2018-03-08 15:11:00

புலம்பெயர்ந்தோர் துயர் துடைக்க திருஅவை அனுப்பப்பட்டுள்ளது


மார்ச்,08,2018. வறியோரையும், ஒடுக்கப்பட்டோரையும் விடுவிக்கும் பணி, இறைவனால் கத்தோலிக்கத் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பன்னாட்டு குழுவினரிடம் கூறினார்.

அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகத்தின் 130க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகள், உரோம் நகரில் மேற்கொண்ட ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில், இவ்வியாழன் காலை, திருத்தந்தையைச் சந்திக்கச் சென்ற வேளையில், இக்கழகம் ஆற்றிவரும் பணிகள், திருஅவையின் இன்றியமையாத கூறுகள் என்று திருத்தந்தை கூறினார்.

எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த இஸ்ரயேல் மக்கள், இறைவனிடம் எழுப்பிய குரலை அவர் கேட்டதுபோல், இன்றும், உலகெங்கும், புலம்பெயர்ந்தோர் எழுப்பும் அவலக் குரலை செவிமடுக்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரயேல் மக்களை விடுவிக்கும் பணி மோசேக்கு வழங்கப்பட்டதுபோல, புலம்பெயர்ந்தோரின் துயர் துடைக்க திருஅவை அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

இரண்டாம் உலகப்போரினால் உருவான குடிபெயரும் பிரச்சனையைத் தீர்க்க, 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்துலக கத்தோலிக்க குடிபெயர்ந்தோர் கழகம், இன்றைய உலகில் சந்திக்கும் பிரச்சனைகளும், சவால்களும் அதிகமானதாக, வேறுபட்டதாக உள்ளன என்பதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கழகம் பெற்றுள்ள அனுபவங்கள், மற்றும் தலத்திருஅவையுடன் இணைந்து ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியன என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, புலம் பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் சார்பாக நிறைவேற்றவேண்டிய கடமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.