2018-03-08 15:43:00

புலம்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது – திருத்தந்தையின் அணிந்துரை


மார்ச்,08,2018. வாழ்வில் நாம் சந்திக்கும் கடினமானச் சூழல்கள், குறைபாடுகள் ஆகியவற்றினால் மனம் தளர்ந்து, புலம்பிக்கொண்டிருப்பதற்குப் பதில், எதிர்ப்புக்களை எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளமுடியும் என்பதைக் குறித்து பல கருத்துக்களை சால்வோ நோயே (Salvo Noè) அவர்கள் வழங்கியுள்ளார் என்று, ஒரு நூலின் அணிந்துரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

சால்வோ நோயே என்ற மனநல மருத்துவர், "புலம்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது" ("Vietato lamentarsi") என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு நூலுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள அணிந்துரையில், நம்மைச் சுற்றி நிகழ்வன அனைத்திலுமிருந்து விலகி நிற்பதோ, அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதோ பயனளிக்காது, மாறாக, அந்தச் சூழலை எவ்விதம் மாற்றி அமைக்கலாம் என்பதைச் சிந்திப்பதே பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.

நம்மை அடையும் துன்பங்களால் மனமிழந்து அழுது புலம்பலாம், அல்லது, அன்பினால், நம்பிக்கையினால் அத்துன்பங்களை வெல்லலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அணிந்துரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திருத்தந்தை எழுதியுள்ள இந்த அணிந்துரை, Famiglia Cristiana என்ற நாளிதழில் மார்ச் 8, இவ்வியாழனன்று வெளியாகியுள்ளது. சால்வோ நோயே அவர்கள் எழுதியுள்ள இந்நூல், மார்ச் 26ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு, ஜூன் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரை நேரத்தில் அவரைச் சந்தித்த சால்வோ நோயே அவர்கள், "புலம்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது" என்ற ஓர் விளம்பர அட்டையை வழங்கினார் என்பதும், அந்த அட்டையை, திருத்தந்தை, தன் அறைக்கு முன் ஒரு சில வாரங்கள் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.