2018-03-08 14:49:00

இமயமாகும் இளமை : சிறுமிகளின் உரிமைக்காக உழைக்கும் இளம்பெண்


21 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி ரோமா, டெல்லி மாநகரின் தெற்குப் பகுதியில் தன் பெற்றோர் மற்றும், இரு உடன்பிறப்புக்களுடன் வாழ்ந்து வருபவர். குடும்ப வறுமையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தவேண்டிய சூழல் இவருக்கு ஏற்பட்டது. ஆனால், வேலைக்குச் செல்வதற்கோ அல்லது படிப்புச் சான்றிதழோ எதுவும் இல்லாததால், தரமான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அச்சமயத்தில் இவருக்கு, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காகச் செயல்பட்டுவரும் உலகளாவிய சக்ஷம் திட்ட அமைப்பின் அறிமுகம் கிடைத்தது. அந்த அமைப்பு நடத்திவந்த, இளையோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில், தன் பெயரைப் பதிவு செய்தார் ரோமா. அந்த அமைப்பின் உதவியுடன், தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடித்து, விரைவில் ஒரு நல்ல தரமான வேலையிலும் சேர்ந்தார் ரோமா. தற்போது இளம்பெண் ரோமா அவர்கள், தனது சொந்த செலவுகளைத் தானே பார்த்துக்கொள்வதோடு, தன் குடும்பத்திற்கும் உதவி வருகிறார். அதுமட்டுமல்ல, சிறுமிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், சிறுமிகளின் மதிப்பை ஊக்குவிப்பதன் வழியாக, அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அவர்கள் முன்னேறுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார், ரோமா.   

அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கென இயங்கும் சக்ஷம் அமைப்பு, தொழில்உலகில் சிறுமிகளும், சிறுவர்களும் சிறந்த இடங்களைப் பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. 2011ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், 3,400 இளம்பெண்கள் உட்பட, 5,500க்கு மேற்பட்ட இளையோர் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பைப் பெறவும் உதவியுள்ளது. இந்த அமைப்பில் பயறிசி பெற்ற இளையோரில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பாதுகாப்பான பணிகளில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.