2018-03-07 16:32:00

புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு பதில்களைத் தேடுவதற்கு...


மார்ச்,07,2018. குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு திருஅவை தகுந்த பதில்களைத் தேடுவதற்கு, அனைத்துலக குடிபெயர்ந்தோர் கத்தோலிக்க கழகம் தன் பணிகளை தீவிரப்படுத்தவேண்டிய நேரம் தற்போது உருவாகியுள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அனைத்துலக குடிபெயர்ந்தோர் கத்தோலிக்க கழகம் உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இரண்டாம் உலகப் போரின் விளைவாக, பெருமளவில் உருவான புலம் பெயர்ந்தோர் பிரச்சனையை ஆய்வு செய்யவும் ஒருங்கிணைக்கவும் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் இக்கழகத்தை உருவாக்கினார் என்று கூறினார்.

1951ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கழகம், நாடுவிட்டு நாடு செல்லும் மக்களை கிறிஸ்தவ கண்ணோட்டத்தோடு காண வேண்டும் என்பதை உலகறியச் செய்தது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ICMC என்றழைக்கப்படும் இக்கழகம், தற்போது, திருப்பீடத்தில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் ஓர் அங்கமான, புலம்பெயர்ந்தோர் பிரிவுடன் இணைந்து பணியாற்றுவதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் மகிழ்வுடன் சுட்டிக்காட்டினார்.

2018ம் ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு நாள்கள், Marrakech எனுமிடத்தில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கிற்கு, ICMC கழகம், பல வழிகளில், தன்னையே தயாரிக்க வேண்டும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.