2018-03-07 15:23:00

திருப்பலியில் பங்குகொள்ள பணம் கட்டத் தேவையில்லை


மார்ச்,07,2018. உரோம் நகரில் கடந்த சில நாள்களாக மழை பெய்துகொண்டிருந்தவேளை, இப்புதன் காலையில் கதிரவன் பளிச்சென தன் கரங்களை வீசத் தொடங்கினான். இதமான காலநிலையில், இப்புதன் காலையில், ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கிலும், மேலும் ஏராளமான திருப்பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்திலும் அமர்ந்திருந்தனர். முதலில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு உரையாற்றி ஆசீர் வழங்கிய பின்னர், தூய பேதுரு பசிலிக்கா பேராயலத்தில் அமர்ந்திருந்த மக்களைச் சந்தித்து தன் எண்ணங்களை எடுத்துரைத்து, ஆசீர் வழங்கினார். கடந்த சில வாரங்களாக, திருப்பலி குறித்து புதன் மறைக்கல்வியுரைகளில் விளக்கி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, நற்கருணை மன்றாட்டு பற்றி விளக்கினார். திருப்பலியில் பங்குகொள்ள பணம் கட்டத் தேவையில்லை என்றும், கிறிஸ்துவின் மீட்பு இலவசமானது என்றும் இந்த உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, திருப்பலி குறித்த நம் மறைக்கல்வியுரையில், நற்கருணை விருந்துக்குமுன் சொல்லப்படும் செபம் பற்றி, இன்று நோக்குவோம். இச்செபத்தில், இறுதி இரவு உணவில், நம் ஆண்டவர் கூறிய சொற்களையும், செயல்களையும் நாம் மீண்டும் சொல்லி, நினைவுகூருகின்றோம். அப்பத்தையும், இரசத்தையும் ஒப்புக்கொடுக்கும்போது, அவை, நம் ஆண்டவரின் திருஉடலாகவும், திருஇரத்தமாகவும் மாறுகின்றன. அதில், ஆண்டவர், சிலுவையில் செய்த ஒப்புரவுப் பலியோடு நம்மையே நாம் ஒன்றிணைக்கின்றோம். நற்கருணை மன்றாட்டுக்குமுன் சொல்லப்படும், ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்று, அருள்பணியாளர் தொடங்கும் செபம், கடவுளின் ஆசிர்வாதங்களுக்கு நன்றி சொல்ல, நம் இதயங்களை மேலே எழுப்புவதற்கு நம்மை அழைக்கின்றது. இச்செபத்திற்குப் பின்னர், திருப்பலியை நிறைவேற்றுபவர், நம் காணிக்கைகள் மீது தூய ஆவியார் பொழியப்படச் செபிக்கின்றார். இச்செபத்தில் சொல்லப்படும் சொற்களால், கிறிஸ்து, உண்மையிலேயே, தம் உடல் மற்றும் குருதியின் அருளடையாளத்தில் பிரசன்னமாக இருக்கின்றார். நம் ஆண்டவரின் மரணத்தையும், உயிர்ப்பையும் கொண்டாடும் இந்த நினைவுப் பேருண்மையில் சொல்லப்படும் நற்கருணை மன்றாட்டு, தூய ஆவியாரில், நாம் ஒருவர் ஒருவரோடு கிறிஸ்துவின் மறையுடலில் ஒன்றிக்கவும், இறைத்தந்தையின் முன்பாக, இறைமகன் எழுப்பும் புகழும், பரிந்துரையும் மிக்க அவரின் நித்திய தியாகத்தில் ஒன்றிக்கவும் நாம் ஈர்க்கப்படுகிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும், நாம் இந்த விசுவாச மறையுண்மையில் முழுமையாக நுழைவோமாக. இது, பாவத்திற்கு மன்னிப்பைக் கொண்டு வருகிறது. மேலும், இது, திருஅவையை ஒன்றிப்பில் கட்டியெழுப்புகிறது. அத்துடன், நம் முழு மனிதக் குடும்பத்தின் ஒப்புரவு மற்றும், அமைதிக்காகச் செபிக்கவும் உதவுகின்றது.  

இவ்வாறு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளும், ஆன்மீகப் புதுப்பித்தலும் நிறைந்த இத்தவக்காலத்தில் எல்லாருக்காகவும் செபிப்பதாகக் கூறி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.