2018-03-07 16:11:00

திருத்தந்தை 6ம் பால், பேராயர் ரொமேரோ - புதுமைகள் ஏற்பு


மார்ச்,07,2018. அருளாளரான திருத்தந்தை 6ம் பால், மற்றும் அருளாளரான பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 6, இச்செவ்வாயன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இச்செவ்வாய் பிற்பகல் திருத்தந்தையைச் சந்தித்த வேளையில், 5 அருளாளர்கள் மற்றும் வணக்கத்துக்குரிய ஒருவரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளை சமர்ப்பித்தபோது, அவற்றை திருத்தந்தை ஏற்று, ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்த ஐந்து அருளாளர்கள், புனிதர்களாகவும், வணக்கத்துக்குரியவர் அருளாளராகவும் உயர்த்தப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ளது.

இவையன்றி, ஆறு இறையடியார்களின் புண்ணியம் மிகுந்த வாழ்வும், ஓர் இறையடியாரின் மறைசாட்சிய மரணமும் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அருளாளர்களான திருத்தந்தை 6ம் பால், சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ,  மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி, மற்றும் வின்சென்சோ ரொமானோ, அருள் சகோதரி மரிய கத்தரீனா கஸ்பார் ஆகிய ஐவரின் பரிந்துரைகளால் நிகழ்ந்துள்ள புதுமைகளையும், வணக்கத்துக்குரிய அருள்சகோதரி மரிய ஃபெலிசியா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ள புதுமையையும் திருத்தந்தை ஏற்று, ஒப்புதல் அளித்துள்ளார்.

1944ம் ஆண்டு  சுலோவாக்கியா நாட்டில் கொல்லப்பட்ட பொதுநிலையினரான அன்னா கொலஸரோவா என்ற இறையடியாரின் மரணம், மறைசாட்சிய மரணம் என்பதையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இறையடியார்களான Bernardo Łubieński, Cecilio Maria Cortinovis, Giustina Schiapparoli, Maria Schiapparoli, Maria Antonella Bordoni, Alessandra Sabattini, ஆகியோரின் புண்ணியம் மிகுந்த வாழ்வையும் திருத்தந்தை ஏற்று, ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தந்தை ஒப்புதல் அளித்துள்ள 13 பேர் கொண்ட இக்குழுவில், ஒரு திருத்தந்தை, ஒரு பேராயர் உட்பட, அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள், பொதுநிலையினர் என்று திருஅவையின் அனைத்து தரப்பினரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்களை, இலாத்தரன் பசிலிக்காவில், பிப்ரவரி மாதம் சந்தித்த வேளையில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால் அவர்கள், 2018ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படுவார் என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.