2018-03-03 09:52:00

ஜூன் 21ல் ஜெனீவாவிலுள்ள WCC மன்றத்திற்கு திருத்தந்தை


மார்ச்,02,2018. WCC எனப்படும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, வருகிற ஜூன் 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெனீவா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று, திருப்பீடச் செய்தி தொடர்பாளர் Greg Burke அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். 

‘ஒன்றுசேர்ந்து நடத்தல், செபித்தல், பணியாற்றுதல்’ என்ற தலைப்பில், திருத்தந்தையின் இப்பயணம் நடைபெறவுள்ளது. மேலும், இப்பயணம் குறித்து, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்களும், WCC மன்றப் பொதுச் செயலரான, மறைபோதகர் Olav Fykse Tveit அவர்களும், செய்தியாளர்கள் கூட்டத்தில், இவ்வெள்ளிக்கிழமையன்று விளக்கினர்.

WCC மன்றம், 1948ம் ஆண்டில், 147 கிறிஸ்தவ சபைகளைக் கொண்டு  ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இச்சபைகள், பெரும்பாலும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சார்ந்தவையாக இருந்தன. ஆனால், தற்போது, இம்மன்றத்தில், ஆர்த்தடாக்ஸ், ஆங்லிக்கன், பாப்டிஸ்ட், லூத்தரன், மெத்தடிஸ்ட், சீர்திருத்தம், பல தனிப்பட்ட சபைகள் உட்பட, உலக அளவில் 348 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. 1965ம் ஆண்டிலிருந்து, கத்தோலிக்கத் திருஅவை, WCC மன்றத்தோடு நெருங்கி பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.