2018-03-03 16:02:00

சமயத் தீவிரவாதத்தைத் தண்டிப்பதற்கு சட்டம் அவசியம்


மார்ச்,03,2018. ஈராக்கில் காழ்ப்புணர்வு மற்றும் வன்முறையைத் தூண்டும், மதம் சார்ந்த அனைத்துவிதமான அறிவிப்புக்களைத் தண்டிப்பதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று, அந்நாட்டு சமயத் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்களின் முயற்சியினால் நடத்தப்பட்ட சமயத் தலைவர்கள் கூட்டத்தில், வெறுப்புணர்வைத் தூண்டும் சமயத் தீவிரவாதத்தைத் தண்டிப்பதற்கு சட்டம் அவசியம்  என்று தீர்மானிக்கப்பட்டது என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், நம் இறுதி தீர்ப்பு நாளில், இறைவன் நம்மிடம், நாம் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வியை எழுப்பமாட்டார், மாறாக, நாம் நம் சகோதரர், சகோதரிகளுக்கும், மக்களுக்கும் ஆற்றிய சேவை என்ன என்றே கேட்பார் என்று கூறினார். 

இக்கூட்டத்தில், ஷியா, சுன்னி முஸ்லிம் பிரிவுத் தலைவர்கள், கிறிஸ்தவ சபையின் தலைவர்கள், யாசிதி இனத் தலைவர்கள் உட்பட, ஏறத்தாழ 30 சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.