2018-03-01 15:19:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 49 கர்தினால்கள்–புதிய நூல்


மார்ச்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ள 49 கர்தினால்கள், தங்களை திருத்தந்தை தெரிவு செய்தது குறித்தும், திருஅவையின் மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, புதிய நூல் ஒன்று, பிப்ரவரி 28, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

"Tutti gli uomini di Francesco" அதாவது, "பிரான்சிஸ் அவர்களின் அனைத்து மனிதர்கள்" என்ற தலைப்பில் புனித பவுல் வெளியீட்டகம் உருவாக்கியுள்ள இந்நூலுக்கு, ஹொண்டூராஸ் நாட்டின் முதல் கர்தினாலாக உயர்த்தப்பட்ட கர்தினால் ஆஸ்கர் ரோத்ரிகஸ் மரதியாகா (Óscar Rodríguez Maradiaga) அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

புவனஸ் அயிரஸ் பேராயராகப் பணியாற்றிவந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், 2001ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்ட அதே நாளன்று கர்தினால்களாக உருவாக்கப்பட்ட 44 பேரில் தானும் ஒருவராக இருந்ததை, கர்தினால் மரதியாகா அவர்கள், தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள 49 கர்தினால்களில், மூன்றில் இருவர், ஐரோப்பியர் அல்லாதோர் என்றும், தற்போது, திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட 118 கர்தினால்களில், 68 பேர், ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.