2018-02-28 15:09:00

இமயமாகும் இளமை......: ஆடுகளத்தை உருவாக்கித் தரும் இளைஞர்கள்!


ஒலிம்பிக் நடக்கும்போது மட்டும்தான் இந்தியாவின் விளையாட்டுச் சூழலைப் பற்றிய கருத்துகளும் விவாதங்களும் சமூக ஊடகங்களில் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கும். பிறகு, ஒலிம்பிக் முடிந்தவுடன் விளையாட்டுத் துறையின் மீதிருக்கும் அக்கறையும் மறைந்துவிடும். இந்தப் பொதுச் சமூகத்தின் சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள். தாமஸ் ஆபிரகாம், வி.ரங்கராஜா ஆகிய இரு இளைஞரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ‘ரேடியன்ட் ஸ்போர்ட்’(Radiant Sport) என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பின் வழியாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். தாமஸ் ஆபிரகாம் சொல்கிறார் -“இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், அந்தத் திறமைகளைக் கண்டறிவதில்தான் பிரச்சனை. இந்தப் பிரச்சனையை முன்வைத்துத்தான் ‘ரேடியன்ட் ஸ்போர்ட் அமைப்பை உருவாக்கினோம். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பின்னணியில் வளரும் குழந்தைகளுக்கு விளையாட்டில் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதும் அவர்களுக்கான ஒரு களம் அமைத்துத் தருவதும்தான் எங்களுடைய முதல் நோக்கம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறோம்” என்று.  தாமஸ் ஆபிரகாம் அவர்கள், மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டு வீரர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.