2018-02-27 15:14:00

“C9” கர்தினால்கள் அவையின் 23வது கூட்டம்


பிப்.27,2018. “தன்னலத்தை வெற்றிகண்டு, வசதியான வாழ்வைக் கடந்து செல்கின்ற மகிழ்வான ஒரு வாழ்வு, இயேசுவைச் சந்திப்பதில் கிடைக்கின்றது, இவ்வாழ்வை வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியானது.

மேலும், பேரருள்திரு Alfred Xuereb அவர்களை, பேராயர் நிலைக்கு உயர்த்தி, தென் கொரியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு, திருப்பீடத் தூதுவராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Gozo தீவில் 1958ம் ஆண்டு பிறந்த பேரருள்திரு Xuereb அவர்கள், 1984ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்று, 1991ம் ஆண்டில், இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், செயலராகப் பணியைத் தொடங்கினார். 1995ம் ஆண்டில் திருப்பீடச் செயலகத்தில் பணியை ஆரம்பித்த இவர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் செயலராகப் பணியாற்றியுள்ளார். இவர், திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் பொதுச்செயலராக, 2014ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். 

மேலும், திருப்பீடச் சீர்திருத்தப் பணிகளில் திருத்தந்தைக்கு உதவிசெய்யும் “C9” எனப்படும் கர்தினால்கள் அவையின் 23வது கூட்டம், பிப்ரவரி 26, இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்பில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், திருப்பீடத் தலைமையகம் பற்றிய “Pastor Bonus” திருத்தூது கொள்கை விளக்கத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் திட்டங்கள் குறித்து, கர்தினால்கள் கலந்துரையாடி வருகின்றனர்.

“C9” கர்தினால்கள் அவையின் 23வது கூட்டம், பிப்ரவரி 28, இப்புதன் வரை நடைபெறும்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.