2018-02-23 10:05:00

போதகர் பில்லி கிரகாம் மறைவுக்கு இரங்கல் செய்திகள்


பிப்.22,2018. பிப்ரவரி 21, இப்புதனன்று, தன் 99வது வயதில், இறைவனடி சேர்ந்த பில்லி கிரகாம் (Billy Graham) அவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை தலைவர்களும், ஏனைய கிறிஸ்தவ சபை தலைவர்களும், இரங்கல் செய்தியாக, தங்கள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இறைவனின் வார்த்தையை தன் மறையுரைகளில் மட்டுமல்லாமல், தன் வாழ்வாலும் போதித்து வந்த பில்லி கிரகாம் அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்று, அமெரிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள் கூறியுள்ளார்.

தான் பிறந்து வளர்ந்தது, ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் என்றாலும், தன் குடும்பத்தில் பில்லி கிரகாம் அவர்களின் மறையுரைகளுக்கு தனியொரு இடம் இருந்தது என்று, நியூ யார்க் கர்தினால் டிமத்தி டோலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கிறிஸ்தவ சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு பெற்ற ஒரு சில மனிதர்களில் பில்லி கிரகாம் அவர்களும் ஒருவர் என்றும், அவருக்கு இணை அவரே என்றும் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள் கூறியுள்ளார்.

1918ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் North Carolina மாநிலத்தில் பிறந்த பில்லி கிரகாம் அவர்கள், 1939ம் ஆண்டு முதல் தன் போதகப் பணியைத் துவக்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை திறம்படச் செய்தார்.

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த இவரை, 'தன்னுடன் பிறவாத சகோதரர்' என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 2005ம் ஆண்டு மறைந்த வேளையில், 'இவ்வுலகில் கடந்த 100 ஆண்டுகளில் மிக அதிகமான தாக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரை நாம் இழந்துள்ளோம்' என்று பில்லி கிரகாம் அவர்கள் கூறினார்.

தன் வாழ்நாளில் 30க்கும் அதிகமான ஆன்மீக நூல்களை உருவாக்கியுள்ள பில்லி கிரகாம் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய இனவெறிக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்தவர் என்றும், கறுப்பின மக்களின் தலைவர், மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆதாரம் : CNA/ ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.