2018-02-23 14:05:00

திருத்தந்தை, திருப்பீட அதிகாரிகளின் ஆண்டு தியானம் நிறைவு


பிப்.23,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும், உரோம் நகருக்கருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் மேற்கொண்ட ஆண்டு தியானத்தை, பிப்ரவரி 23, இவ்வெள்ளியன்று நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பியுள்ளனர்.

இந்த தியான நாள்களில், தியான உரைகளை வழங்கிய, அருள்பணி José Tolentino Mendonça அவர்களுக்கு, அனைவரின் பெயரால் நன்றி தெரிவிப்பதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடான், காங்கோ, சிரியா ஆகிய நாடுகளில் அமைதி நிலவுவதற்காக, உண்ணா நோன்பும் செபமும் கடைப்பிடிக்கும் நாளாக, இந்நாள் அமைகின்றது என்று கூறினார்.

இந்தச் சிறிய மந்தை, திருஅவை பற்றி உணர்வதற்கும், இம்மந்தை, உலகப்போக்கான அதிகாரத்தில் மூழ்கிவிடாதிருக்க எச்சரித்ததற்கும், திருஅவை, தூய ஆவியாருக்குரிய கூண்டு அல்ல, மாறாக, தூய ஆவியார், திருஅவைக்கு வெளியேயும் செயல்படுகிறார் என்பதை நினைவுறுத்தியதற்கும் நன்றி தெரிவிப்பதாக திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியார் எல்லாருக்குமானவர், இவர், மத நம்பிக்கையற்றவர்கள், பிற சமயத்தவர் போன்ற அனைவரிடமும் செயல்படுவதை மேற்கோள்கள் காட்டி விளக்கியதற்கும், உள்ளார்ந்த தேடலில் வாழ்கின்ற கொர்னேலியோ, நூற்றுவர்தலைவர்கள் மற்றும், பேதுருவின் சிறையைக் காத்தவர்கள் இக்காலத்திலும் வாழ்கின்றனர் என்பதை உணர்த்தியதற்காகவும் நன்றி தெரிவிப்பதாக திருத்தந்தை கூறினார்.

எங்களை முடக்கியிருக்கும் அமைப்புமுறைகளில் சிக்கிவிடாமல், அச்சமின்றி தூய ஆவியாருக்குத் திறந்தமனம் கொண்டவர்களாய் வாழ உதவியதற்கு, தியான உரையாளரான, அருள்பணி Mendonça அவர்களுக்கு, நன்றி தெரிவித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாங்கள் பாவிகள், எங்களுக்காகச் செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு தியானம், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில், பிப்ரவரி 18, கடந்த ஞாயிறு மாலையில் தொடங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.