2018-02-23 09:48:00

8வது தியான உரை: காணாமற் போன மகன் உவமை


பிப்.22,2018. காணாமற் போன மகன் உவமை, இன்றைய உலகில் குடும்பங்களில் நிலவும் பல உணர்வுகளை, குறிப்பாக, உடன்பிறந்தோரிடையே உள்ள பொறாமை, பெற்றோரிடம் உள்ள இரக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது என்று அருள்பணி José Tolentino Mendonça அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய தியான உரையில் கூறினார்.

திருத்தந்தையும், திருப்பீட அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள ஆண்டு தியானத்தை வழிநடத்தி வரும் அருள்பணி Mendonça அவர்கள், காணாமற் போன மகன் உவமை முகம் பார்க்கும் கண்ணாடி போல் அமைந்து நம் குடும்பங்களில் நிகழ்வனவற்றை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

தந்தையிடமிருந்து சுதந்திரம் பெற விழைந்த இளைய மகன், இளையவருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறாமை கொண்ட மூத்த மகன் என்ற இருவருக்கும் இடையே தந்தையின் கனிவையும், நிபந்தனையற்ற அன்பையும் காண முடிகிறது என்று அருள்பணி Mendonça அவர்கள், தன் தியான உரையில் குறிப்பிட்டார்.

பிறருடைய தகுதிக்குத் தகுந்த வகையில் வழங்குவது இரக்கம் அல்ல, மாறாக, எவ்வித முற்சார்பு எண்ணங்கள், நிபந்தனைகள் இல்லாமல் வழங்குவதே உண்மையான இரக்கம் என்று சுட்டிக்காட்டிய அருள்பணி Mendonça அவர்கள், இறைவனின் இத்தகைய அன்புக்கு, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள தந்தை சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.