2018-02-23 09:57:00

7வது தியான உரை: இறைவனைத் தடுக்கும் நம் அகந்தை


பிப்.22,2018. இறைவனின் வாழ்வு நம்முள் வேரூன்ற தடையாக இருப்பது நமது வலுவற்ற நிலை அல்ல, மாறாக அது நமது அகந்தை என்று அருள்பணி José Tolentino Mendonça அவர்கள், இப்புதன் பிற்பகல் வழங்கிய தியான உரையில் கூறினார்.

பிப்ரவரி 18, கடந்த ஞாயிறு மாலை முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும், உரோம் நகருக்கருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானத்தை வழிநடத்தி வரும் அருள்பணி Mendonça அவர்கள், பலமற்ற நிலை அல்ல, மாறாக கடினப்பட்ட உள்ளமே இறைவனின் வரவைத் தடுக்கும் பெரும் சுவர் என்று கூறினார்.

கடவுள் நம்பிக்கையற்றவர்களும் சில வேளைகளில் இறைவனின் செயல்பாடுகளைக் கண்டு வியந்து பாராட்ட இயலும், ஆனால், தங்கள் கருத்துக்களை சிறிதும் மாற்ற மனமின்றி கடினப்பட்டவர்கள் உள்ளத்தில் இறைவனால் வியப்புக்களை உருவாக்க இயலாது என்று அருள்பணி Mendonça அவர்கள், எச்சரிக்கை விடுத்தார்.

வலுவற்ற நிலையிலும் நம்மால் இறைவனின் செயல்களை உணர முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Mendonça அவர்கள், திருத்தூதர் பவுல், "நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்" என்று கூறுவதில் இந்த உண்மை விளங்குகிறது என்று கூறினார்.

இயேசு பாலை நிலத்தில் சாத்தானிடமிருந்து அடைந்த மூன்று சோதனைகளையும் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட அருள்பணி Mendonça அவர்கள், பொருள், பதவி, அதிகாரம் என்ற சோதனைகள் இன்றும் நம்மைச் சுற்றி தொடர்கின்றன என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.