2018-02-21 15:09:00

அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்


பிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார்.

தன் ஆண்டு தியானத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களான 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான் பால் ஆகியோரைத் தொடர்ந்து, அருளாளர் 6ம் பால் அவர்களும் புனிதராக உயர்த்தப்படுவார் என்று கூறினார்.

உரோம் நகரின் ஆயர்களாகப் பணியாற்றிய அண்மைய திருத்தந்தையர்களில் பலர் புனிதர்களாக, அருளாளர்களாக, அல்லது வணக்கத்துக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வரிசையில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், தானும், 'காத்திருப்போர் பட்டியலில்' இருப்பதாகவும், தங்களுக்காகச் செபிக்கும்படியும், நகைச்சுவை உணர்வோடு கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்களாக பணியாற்றியவர்களில், 80க்கும் மேற்பட்ட திருத்தந்தையர், புனிதர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். அண்மையத் திருத்தந்தையர்களில், அருளாளரான 9ம் பயஸ் புனிதராகவும், வணக்கத்திற்குரிய 12ம் பயஸ் மற்றும் முதலாம் ஜான் பால் ஆகியோர் அருளாளராகவும் உயர்த்தப்படுவதற்கு முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.