2018-02-20 12:50:00

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கோவிலில் ISIS தாக்குதல்


பிப்.19,2018. இரஷ்யாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தாகேஸ்தான் (Dagestan) மாநிலத்தில், கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது நடத்தப்பட்டத் தாக்குதலில், 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிறு மாலை, திருப்பலியில் பங்கேற்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் மீது, 22 வயது நிறைந்த இளைஞர் ஒருவர், 'அல்லாகு அக்பர்' என்று சப்தமிட்டுக்கொண்டே, துப்பாக்கியால் மேற்கொண்ட தாக்குதலில், இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

தவக்காலத்திற்கு முன்பாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில், மாஸ்லெனித்சா (Maslenitsa) என்ற பெயரில் கொண்டாடப்படும் ஒரு வார நிகழ்வில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே மோதலை உருவாக்க முயலும் கொடூரத் தாக்குதல் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தாகேஸ்தான் மாநிலத்தின் கிஸ்லியார் (Kizlyar) ஆர்த்தடாக்ஸ் கோவிலில் நடந்த இத்தாக்குதலில், 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை தாங்களே மேற்கொண்டதாக ISIS எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒரு தந்திச் செய்தி வழியே அறிவித்துள்ளது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.