2018-02-20 15:20:00

இயேசு நம் தாகத்தைத் தணிக்க விரும்புகிறார்


பிப்.20,2018. அருள்பணி, José Tolentino de Mendonça அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் வழங்கிய தியானச் சிந்தனையில், நம் வாழ்வு முழுமையடையாமலும், தொடர்ந்து கட்டியெழுப்பப்பட்டும் வருகின்ற நிலையிலும்கூட, இயேசு தம் எல்லையில்லா அன்பை நம்மீது பொழிகின்றார் என்று கூறினார்.

உரோம் நகருக்கு 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள, அரிச்சா நகர் தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், பிப்ரவரி 18, இஞ்ஞாயிறு மாலை, ஆண்டு தியானத்தைத் துவக்கியுள்ள, திருத்தந்தைக்கும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கும் தியானச் சிந்தனைகளை வழங்கிவரும் அருள்பணி Mendonça அவர்கள், முதல் நாள் தியான உரையில் இவ்வாறு கூறினார்.

யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும் (யோவா.7:37) என்ற, இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி சிந்தனைகளை வழங்கிய அருள்பணி Mendonça அவர்கள், இயேசு நம்முன் நின்று இச்சொற்களைக் கூறுகின்றார் என்றும் கூறினார்.

நாம் நிறைவற்றவர்கள் என்று தெரிந்திருந்தும், இயேசு தம் எல்லையில்லா அன்பாகிய வாழ்வு தரும் நீரை வழங்குகின்றார் என்றுரைத்த அருள்பணி Mendonça அவர்கள், நாம்தான் தாகமாக இருக்கின்றோம், நாம் எவ்வளவு தாகமாக இருக்கின்றோம் என்பதை ஏற்று, அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று கூறினார்.

உடல் வறண்ட நிலையில் இருப்பவர், தண்ணீர் குணப்படுத்தும் மருந்து என்பதை உணர்வார் என்றும், தண்ணீர், தாகத்தால் கற்றுக்கொடுக்கப்படுகின்றது என அமெரிக்க கவிஞர் Emily Dickinson அவர்கள் கூறினார் என்றும், தியான உரையில் கூறிய அருள்பணி Mendonça அவர்கள், தம்முடன் நாம் உரையாட வேண்டுமென இயேசு விரும்புகின்றார் என்றும் கூறினார். 

‘கிறிஸ்துவின் தாகம்’என்ற தலைப்பில் திருத்தந்தையும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளும் மேற்கொள்ளும் ஆண்டு தியானம், பிப்ரவரி 23 வருகிற வெள்ளியன்று நிறைவடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.