2018-02-19 15:10:00

இமயமாகும் இளமை : சுயதொழிலில் சாதிக்கும் இளைஞர்


உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின், முப்பது வயதுக்குட்பட்ட (Forbes 30 Under 30) சுயதொழில் சாதனையாளர்களின், 2018ம் ஆண்டின் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் அக்‌ஷயா சண்முகம். சென்னையைச் சேர்ந்த, 29 வயது நிரம்பிய இவர், Lumme Inc என்கிற அமெரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் சி.இ.ஒ பொறுப்பு வகிக்கிறார். புகை, மது போன்ற அடிமைத்தனங்களிலிருந்து மக்களை மீட்கும் நோக்கத்துடன், இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள ஸ்மார்ட் கைகடிகாரம் மற்றும் ஸ்மார்ட்கைபேசி தொழில் நுட்பக் கருவிகளே, இவரை ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடிக்க வைத்திருக்கிறது. பள்ளிப்படிப்பு முதல், இளங்கலை பட்டப் படிப்புவரை சென்னையில் படித்த இவர், எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிப்பில் முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கேயே பயோ-மெடிக்கல் துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் முடித்து, நலவாழ்வு தொடர்பான Startup தொழிலையும் தொடங்கினார். அக்‌ஷயா சண்முகம் அவர்கள், தனது தொழிலை இவ்வாறு விளக்குகிறார்... புகைப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர்,  நாங்கள் கண்டுபிடித்துள்ள ஸ்மார்ட் கைகடிகாரத்தை தன் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் எந்தெந்த நேரங்களில் சிகரெட் பிடிக்கிறார், சிகரெட் பிடிப்பதற்கு எண்ணம் வரும்போது கைகளை எப்படி அசைப்பார் என்பதையெல்லாம் ஸ்மார்ட் கைகடிகாரம் கண்காணிக்கும். அதன்பிறகு, அந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்போது, உங்களுக்குப் புகைப்பிடிக்கும் எண்ணம் இப்போது எழலாம் என்று, ஓர் எச்சரிக்கையை அவருடைய கைபேசிக்கு அனுப்பி அதை மட்டுப்படுத்தச் சொல்லும். இதேமாதிரி மது அருந்துகிறவர்களுக்கும், அதிகமாகச் சாப்பிடுகிறவர்களுக்கும் எச்சரிக்கை போகும். ஸ்மார்ட்கைபேசியில் ‘போதை மீட்பு ஆப்’பை பதிவிறக்கம் பண்ணினால், அதிலும் எச்சரிக்கை வரும். பொதுவாக, போதைப் பழக்க அடிமை மீட்பு சிகிச்சைகள் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. அவற்றுக்கான கட்டணமும் அதிகம். இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய மருத்துவர்கள் இருந்தாலும், அவர்கள், சம்பந்தப்பட்ட மீட்பு மையங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும். தவிர, ஒருவருக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால், நடைப்பயிற்சி செய்யுங்கள், இசையைக் கேளுங்கள் போன்ற அறிவுரைகள் சொல்லப்படும். இந்த அறிவுரைகளை எத்தனை பேர் தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்பது கேள்விக்குறியே. ஆனால், எங்களின் கண்டுபிடிப்புகள், அவர்களைத் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருக்கும். விலையும் குறைவுதான் என்று சொல்கிறார் அக்‌ஷயா

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.