2018-02-17 14:59:00

நார்வே தலத்திருஅவை : 2018, புனித ஆண்டு


பிப்.17,2018. இரக்கம்நிறை இறைவனோடு நட்பில் வாழ்வதன் வழியாகக் கிடைக்கும் மகிழ்வில் கத்தோலிக்கர் அனைவரும் வாழ்வதை ஊக்குவிக்கும்பொருட்டு, 2018ம் ஆண்டை, புனித ஆண்டு என அறிவித்துள்ளார், நார்வே நாட்டின் ஆயர் ஒருவர்.

நார்வே நாட்டின் Oslo மற்றும் Trondheim மறைமாவட்ட ஆயர், Bernt Eidsvig அவர்கள், 2018ம் ஆண்டை, புனித ஆண்டாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து SIR செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் Eidsvig அவர்கள், இந்தப் புனித ஆண்டின் ஒரு நிகழ்வாக, வருகிற அக்டோபர் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, பிரான்ஸ் நாட்டின் புனித லிசிய தெரஸ் மற்றும் அவரின் பெற்றோரான புனிதர்கள் Louis, Zélie Martin ஆகியோரின் திருப்பண்டங்கள், ஸ்காண்டிநேவியப் பகுதிகளில் திருப்பவனியாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தார்.

இதற்குத் தயாரிப்பாக, கத்தோலிக்கர், குடும்பங்களிலும், குழுக்களிலும் செபிக்குமாறும் கூறியுள்ள ஆயர் Bernt Eidsvig அவர்கள், அன்பே தனது அழைப்பு என்றுரைத்துள்ள புனித தெரேசா, தனது வாழ்வு வழியாக, விண்ணகத்திற்குச் செல்லும் பாதையைக் காட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், 2016ம் ஆண்டின் நிலவரப்படி, இவாஞ்சலிக்கல்-லூத்தரன் சபை கிறிஸ்தவர்கள் 71.5 விழுக்காடு, கத்தோலிக்கர் 2.9 விழுக்காடு மற்றும், முஸ்லிம்கள் 2.9 விழுக்காடு எனத் தெரியவந்துள்ளது.

2012ம் ஆண்டுவரை, நார்வே நாடாளுமன்ற அதிகாரிகள் அனைவரும், இவாஞ்சலிக்கல்-லூத்தரன் சபையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.