2018-02-17 14:57:00

சீனாவில் 2017ல் திருமுழுக்குப் பெற்றவர்கள் 48,000க்கு மேல்


பிப்.17,2018. சீனாவில் 2017ம் ஆண்டில் 48,556 பேர் புதிதாக திருமுழுக்குப் பெற்றுள்ளார்கள் என்று, சீன புத்தாண்டை முன்னிட்டு, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது, விசுவாச கலாச்சார கழகம்.

மிகவும் ஒதுக்குப் புறங்களில் வாழ்கின்ற கத்தோலிக்கர் குறித்த விவரங்கள் கிடைக்காததால், இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை என்று, அக்கழகம், பீதேஸ் செய்திக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் கத்தோலிக்கர் அதிகமாக வாழ்கின்ற ஹே பெய் மாநிலத்தில், முதல்முறையாக, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், அதாவது 11 ஆயிரத்து 899 பேர், 2017ம் ஆண்டில் திருமுழுக்குப் பெற்றுள்ளனர் என்றும் அக்கழகம் கூறியுள்ளது.

இந்த எண்ணிக்கை ஊக்கமளிப்பதாய் இருந்தாலும், சீனாவில் நற்செய்தி அறிவிப்புப்பணியை ஆற்றுவது, கடினமாகவே உள்ளது என்று கூறியுள்ள அக்கழகம், சீனாவில் அனைத்து கத்தோலிக்கரும், பங்குத்தளங்களும், தாங்கள் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.   

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.