2018-02-17 14:41:00

ஏழ்மையை தரமான கல்வியால் தவிர்க்கலாம்


பிப்.17,2018. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடானில் நிலவும் ஏழ்மையை ஒழிப்பதற்கு, தரமான கல்வி இன்றியமையாதது என்று, அந்நாட்டின் இலொயோலா நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், இயேசு சபை அருள்பணியாளர் Beatus Mauki அவர்கள் கூறினார்.

தென் சூடான் நாட்டின் Wau நகரிலுள்ள இலொயோலா நடுநிலைப் பள்ளி, மாணவர்களுக்கு கல்விக்கூடமாக மட்டுமல்லாமல், அமைதியைத் தேடும் இடமாகவும், வன்முறை மற்றும் போர்களுக்குப் பின்னால், நாட்டின் வருங்காலத்தைக் கட்டியெழுப்ப உதவும் இடமாகவும் அமைந்துள்ளது என்று, அருள்பணி Mauki அவர்கள் கூறினார்.

1982ம் ஆண்டில் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட இப்பள்ளி, அந்நாட்டில் இடம்பெற்ற போரினால் மூடப்பட்டு, தென் சூடான் விடுதலைக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டது. ஆயினும் 2013ம் ஆண்டில், மீண்டும் தொடங்கிய உள்நாட்டுச் சண்டையில் பள்ளியின் செயல்பாடுகள் மந்தமடைந்தாலும், பள்ளி தொடர்ந்து நடைபெற்றது என்று, அருள்பணி Mauki அவர்கள், மேலும் கூறினார்.

ஏறத்தாழ 60 விழுக்காட்டு மாணவர்கள் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளனர் என்றும், இவர்களில் சிலர் பெற்றோரை இழந்தவர்கள் என்றும், அந்நாட்டின் ஒரு கோடியே 20 இலட்சம் பேரில் 40 விழுக்காட்டினர் உணவுப் பற்றாக்குறைவால் துன்புறுகின்றனர் என்றும், அருள்பணி Mauki அவர்கள் கூறினார்.

தென் சூடானில், 2013ம் ஆண்டிலிருந்து நான்காண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையில், குறைந்தது ஐம்பதாயிரம் பேர் இறந்தனர் மற்றும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறினர். மேலும், 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார், புரட்சியாளர்களால் படையில் சேர்க்கப்பட்டனர். மூன்று பள்ளிகளுக்கு ஒன்று வீதம் சேதமடைந்தது, அழிக்கப்பட்டது, ஆக்ரமிக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.