2018-02-16 15:46:00

உரோம் அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.16,2018. மக்கள் சொல்வதற்குச் செவிமடுத்து, துன்புறும் மற்றும் வேதனையில் வாழ்கின்ற மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்குமாறு, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும், உரோம் மறைமாவட்ட  ஆயராகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், அருள்பணியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

மக்களை நட்புடன் நோக்குமாறும், இதுவே மக்களுக்குத் தேவைப்படுகின்றது என்றும், மக்கள் சொல்வதைக் கேட்கும், மேய்ப்புப்பணி காதுகளைக் கொண்டிருக்குமாறும் கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாரிடமிருந்து வரும் செயல்களைப் புரிந்துகொண்டு, காலத்தின் அடையாளங்களைத் தேர்ந்துதெளிந்து, அச்சமின்றி எதார்த்தங்களை அணுகுமாறும், உரோம் அருள்பணியாளர்களிடம் கூறினார்.

இளவயது அருள்பணியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தனிமை நல்லதல்ல, எனவே, குருத்துவ உடன்பிறப்பு உணர்வில் வாழ்வது முக்கியம் என்றும், ஆன்மீக நோயை அனுபவிக்கும்போது, ஆன்மீக வழிகாட்டி அல்லது ஞானமுள்ளவர்களுடன் வழிநடக்குமாறும் பரிந்துரைத்தார்.

பாவமன்னிப்பு வழிபாடாக நடைபெற்ற இந்நிகழ்வில், முதலில், சில அருள்பணியாளர்களுக்கு, ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வழிபாடு முடிந்து, உரோம் குருத்துவ கல்லூரியில், குருத்துவ மாணவர்களுடன் மதிய உணவும் அருந்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.