பிப்.15,2018. ஈராக் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, நிதி உதவி மட்டும் போதாது, மாறாக, இந்நாட்டை, நீதி நிறைந்த குடியரசாக உருவாக்க, பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் தேவை என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
ஈராக் நாட்டிற்கு நிதி உதவி திரட்ட, பிப்ரவரி 12 முதல், 14 முடிய, குவைத்தில் நடைபெற்ற பன்னாட்டு கூட்டத்தைக் குறித்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் அளித்த பேட்டியில், திரட்டப்படும் நிதி, ஊழல் செய்யும் தலைவர்களிடம் சேர்ந்துவிட்டால், அது மீண்டும் அழிவையே கொணரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஊழல் செய்யும் தலைவர்களிடம் சேரும் பணம், மீண்டும், தீவிரவாதிகளின் கரங்களில் சென்றடையும் என்ற அச்சத்தை வெளியிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் நாட்டை கட்டியெழுப்ப மிக அதிகமாக, அவசரமாகத் தேவைப்படுவது, இளையோருக்கு வழங்கப்படும் கல்வி என்று வலியுறுத்திக் கூறினார்.
ஈராக் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு, 88 பில்லியன் டாலர்கள் தேவை என்றும், இவற்றில், 23 பில்லியன் டாலர்கள் உடனடியாகத் தேவை என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |