2018-02-14 16:17:00

கத்தோலிக்க, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் சந்திப்பு


பிப்.14,2018. மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு என்ற கருத்தை மையப்படுத்தி, கத்தோலிக்க திருஅவை மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை பிரதிநிதிகள், பிப்ரவரி 12, இத்திங்களன்று, வியென்னாவில் சந்தித்து, ஒரு சில ஒப்பந்தங்களை நிறைவேற்றினர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

2016ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் உலகத் தலைவர், முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் கியூபா நாட்டின் தலைநகர், ஹவானாவில் சந்தித்த நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நிறைவாக, இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை பிரதிநிதிகள் குழுவின் தலைவராக, மாஸ்கோ சபை வெளியுறவுத் துறையின் தலைவர் ஹிலேரியன் ஆல்பீஸ் (Hilarion Alfeev) அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவிகள் செய்ய, அப்பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை, இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வியென்னா பேராயர், கர்தினால் Cristoph Schönborn அவர்கள், தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.