2018-02-14 15:57:00

இமயமாகும் இளமை... : நீரில் கரையும் பாலிதீன் பை, இளைஞர் சாதனை


மண்வளத்தைப் பாதிக்கும் பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளைத் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார், கோவையைச் சேர்ந்த சிபி என்ற இளைஞர்.

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு உள்ளது.

நம் நாடு என்று மட்டும் இல்லை உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக, இந்த பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரம் உருவெடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், மூன்றே மாதங்களில் மக்கிவிடும் வகையிலான பாலிதீன் பைகைகளைத் தயாரித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார், கோவையைச் சேர்ந்த இளைஞர் சிபி.

”மக்காச்சோளக் கழிவு உள்ளிட்ட சில இயற்கையான காய்கறிக் கழிவுகளுடன் காகிதம் கலந்து இந்தப் பைகள் தயாரிக்கப்படுவதால், இவை மூன்றே மாதங்களில் மக்கிவிடும். இதனால் மண்ணிற்கு எந்தப் பாதிப்பும் வராது,” என்கிறார் சிபி.

”எளிதில் மக்கக்கூடிய வகையில் நாங்கள் தயாரிக்கும் இந்த பாலீதின் பைகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. இவற்றை தீயிட்டு எரித்தால் சாம்பலாகும், சுடுநீரில் கரைத்தால் எளிதில் கரைந்துபோகும். எதிர்பாராதவிதமாக கால்நடைகள் இந்தப் பைகளைச் சாப்பிட்டாலும், இவை இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால், அவற்றிற்கு எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது,”  என்று சிபி நம்பிக்கையுடன்  கூறுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.