2018-02-13 14:32:00

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... 4


19ம் நூற்றாண்டில் (1805-1898) இங்கிலாந்தில் வாழ்ந்த ஜார்ஜ் மியுல்லர் (George Müller) அவர்கள், 117 பள்ளிகளை உருவாக்கி, அவற்றின் வழியே, 1,20,000க்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கல்வி புகட்டி வந்தார். அக்குழந்தைகளில், 10,000த்திற்கும் அதிகமானோர் அனாதைக் குழந்தைகள். தன்னைச் சுற்றியெழுந்த கண்டனக் குரல்களுக்குச் செவிகொடாமல், மியுல்லர் அவர்கள் அனாதைக் குழந்தைகளுக்கு நல்வாழ்வை உருவாக்கித் தந்தார்.

அவர் நடத்திவந்த அனாதை இல்லமொன்றில், ஒரு நாள் காலை, உணவு சிறிதும் இல்லை. இல்லக் கண்காணிப்பாளர், மியுல்லர் அவர்களிடம் சென்று, "குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு காலை உணவு எதுவும் இல்லை" என்று கூறினார். மியுல்லர் அவர்கள், அப்பெண்ணிடம், "குழந்தைகளை உணவறைக்கு அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.

குழந்தைகள், உணவறையில் கூடியதும், மியுல்லர் அவர்கள், உணவருந்துவதற்கு முன் வழக்கமாகச் சொல்லும் செபத்தை, அனைத்து குழந்தைகளோடும் சேர்ந்து கூறினார்: "இறைவா, நீர் எங்களுக்கு அளித்துள்ள உணவுக்காக நன்றி" என்று அவர்கள் சொல்லி முடித்ததும், இல்லத்தின் கதவை யாரோ ஒருவர் தட்டினார். கதவைத் திறந்தபோது, அங்கு, அவ்வூரில் ரொட்டிக்கடை வைத்திருக்கும் உரிமையாளர் நின்றுகொண்டிருந்தார். "நேற்றிரவு என்னால் சரிவரத் தூங்க முடியவில்லை. உங்கள் இல்லத்திற்கு உணவு தேவை என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் எனக்குள் எழுந்து, என் தூக்கத்தை விரட்டியடித்தது. எனவே, விடியற் காலையில் எழுந்து, இல்லத்திற்குத் தேவையான ரொட்டியைத் தயாரித்துக் கொண்டுவந்திருக்கிறேன்" என்றார்.

இல்லத்தில் உணவு இல்லை என்பதை அறிந்திருந்தும், 'இறைவா, நீர் வழங்கும் உணவுக்கு நன்றி' என்று செபிக்கத் துணிந்த மியுல்லர் அவர்கள், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று, அன்னை மரியா எழுப்பிய செபத்திலிருந்து, தன் நம்பிக்கைப் பாடங்களைப் பயின்றிருக்கவேண்டும். மியுல்லர் அவர்களைப் போல, கோடான கோடி மக்கள், நம்பிக்கையோடு செபிப்பதற்கு தூண்டுதலாக இருந்துவரும் அன்னை மரியாவின் சொற்களை சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம்.

தன்னிடம் பிறக்கப்போகும் குழந்தை, தூயவர், இறைவனின் மகன் (லூக்கா 1:35) என்பதை, வானதூதர் வழியே அறிந்த இளம்பெண் மரியா, அச்செய்தியை எப்போதும் 'தன் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' (லூக்கா 2:51). புதுமைகள் செய்யும் ஆற்றல் தன் மகனுக்கு உண்டு என்பதை, மரியா சரிவர அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை அவர் காட்டுவார் என்ற நம்பிக்கை, அன்னை மரியாவிடம் இருந்தது. அந்த நம்பிக்கையே, அவரை இயேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தது.

"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று மரியா கூறியதற்கு, இயேசு தந்த பதில், விவிலிய விரிவுரையாளர்கள், மற்றும், திருஅவைத் தந்தையர் மத்தியில் பல்வேறு எண்ணங்களை எழுப்பியுள்ளது. "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று இயேசு கூறிய அந்த மறுமொழியில், நம் தேடலைத் தொடர்கிறோம்.

பல விவிலியப் பதிப்புகளில், இயேசுவின் இந்தக் கூற்று, பிற சொற்களில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியில் ‘அம்மா’ என்று அவர் அழைத்ததற்குப் பதில், 'பெண்ணே' என்று அழைப்பதாக, இந்தக் கூற்று ஆரம்பமாகிறது. "பெண்ணே, எனக்கும், உமக்கும் என்ன தொடர்பு?" என்ற பாணியில் இந்தக் கேள்வி ஒரு சில பதிப்புக்களில் கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இயேசு தன் தாயைக் கடிந்துகொள்வதுபோல் இந்த சொற்கள் ஒலிக்கின்றன. ஆனால், அவர் கூறுவதை, நடைமுறைக்கு ஏற்றவாறு பொருள் கொண்டால், அது, இவ்வாறு ஒலிக்கும்: "அம்மா, இது அவங்க வீட்டுக் கல்யாணம். இதையெல்லாம் அவங்க முன்னாலேயே யோசிச்சிருக்கணும். இப்ப திடீர்னு வந்து திராட்சை இரசம் தீர்ந்துடுச்சுன்னு நீங்க சொன்னா, நாம் என்ன செய்ய முடியும்?" என்ற ஒரு நியாயமான கேள்வியை இயேசு எழுப்புகிறார்.

"உன் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது மகனே. ஆனால், நியாய, அநியாயம் பார்க்க இப்போது நேரமில்லை. அவசரமானத் தேவை ஒன்று உருவாகியிருக்கு. அதை நிறைவு செய்யவேண்டும்" என்று அன்னை மரியா, தன் மனதுக்குள் எண்ணியதை, இயேசு உணர்ந்திருக்க வேண்டும். எனவே, அவர், தன்னுடைய அடுத்த எண்ணத்தைச் சொல்கிறார்: "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று.

"எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று இயேசு கூறிய இந்தக் கூற்று, யோவான் நற்செய்தியில் இன்னும் சில நிகழ்வுகளில், வேறு சொற்களில், கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்திலும், 'இயேசுவின் நேரம்' என்ற சொற்றொடர், அவரது பாடுகளையும், மரணத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

யோவான் நற்செய்தி, 7ம் பிரிவின் துவக்கத்தில், "யூதர்கள் இயேசுவைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால், அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை" (யோவான் 7:1) என்று கூறும் நற்செய்தியாளர், எருசலேமில் நடைபெற்ற கூடாரத் திருவிழாவில் கலந்துகொள்ள இயேசு 'வெளிப்படையாக அன்றி, மறைவாகச் சென்றார்' (யோவான் 7:10) என்றும் குறிப்பிட்டுள்ளார். மறைவாகச் சென்ற இயேசு, மக்களுக்கு போதிக்கத் துவங்குகிறார். வழக்கம்போல், மதத் தலைவர்களின் அறியாமையை இயேசு கடுமையாகச் சாடுகிறார். இச்சூழலில், நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு கூறியுள்ளார்:

இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை. (யோவான் 7:30)

இதைத் தொடர்ந்து வரும் 8ம் பிரிவில், மீண்டும் இயேசு, எருசலேம் கோவிலில் போதித்தது, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, மதத் தலைவர்களின் வெறியிலிருந்து காத்தது என்ற நிகழ்வுகளைக் குறிப்பிடும் யோவான்,

கோவிலில் காணிக்கைப்பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை. (யோவான் 8:20) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் பாடுகளுக்கு முன்னதாக, சீடர்களுடன் இறுதி இரவுணவை அருந்த, இயேசு முடிவு செய்தபோது, 'அவரது நேரம்' வந்துவிட்டதென்று, நற்செய்தியாளர் யோவான் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்:

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். (யோவான் 13:1)

தனது நேரம் எனில், தன் பாடுகளின் நேரம் என்பதை, தெளிவாக உணர்ந்திருந்த இயேசு, தன் அன்னையிடம், "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று கூறியதை, நாம் பின்வரும் சொற்களில் புரிந்துகொள்ளலாம்: "அம்மா, இதுவரை நாசரேத்தில், நீங்களும், நானும், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் வாழ்ந்து வந்தோம். இதனால், நமக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. இப்போது, நான் என் பணிவாழ்வைத் துவங்குகிறேன். என் பணிவாழ்வில் நான் செய்யப்போகும் அரும் அடையாளங்கள், மக்களுக்குப் பயனளிக்கும் அதேவைளையில், மதத் தலைவர்களின் கோபத்தைத் தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். இச்சூழலில், நான், அனைவருக்கும் தெரியும்படி, ஓர் அரும் அடையாளத்தை இங்கு செய்தால், அது என் இறுதி நேரத்தை விரைவாகக் கொணர்ந்துவிடும். நான் இன்னும் இவ்வுலகில் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. எனவே, 'என் நேரம் இன்னும் வரவில்லை' என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்" என்ற பொருளில், இயேசு தன் அன்னையிடம் "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று கூறினார்.

'நேரம் வரவில்லை' என்று இயேசு கூறியதை, மரியா, முற்றிலும் புரிந்துகொண்டாரா என்பது நிச்சயமில்லை. முன்பு ஒரு முறை, 12 வயது நிறைந்த இயேசு, எருசலேம்  கோவிலில் தங்கிவிட்ட வேளையில், அவரை, மரியா மீண்டும் கண்டபோது, சிறுவன் இயேசு, "நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டுமென உங்களுக்குத் தெரியாதா?" (லூக்கா 2:49) என்ற கேள்வியைக் கேட்டார். அப்போது சிறுவன் இயேசு சொன்னது, மரியாவுக்கு முழுவதும் விளங்கவில்லை. ஆனால், அவற்றைத் தன் மனதில் சிந்தித்தபடியே வீடு திரும்பினார். இப்போதும், இயேசு, "எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்று சொன்னது, மரியாவுக்குச் சரிவரப் புரியவில்லை. ஆனால், தன் மகன் இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண்பார் என்பதில் அந்தத் தாய்க்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. எனவே அவர் பணியாளரை நோக்கி, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்றார்.

பிப்ரவரி 14, இப்புதனன்று நாம் தவக்காலத்தைத் துவங்கும் வேளையில், அன்னை மரியா நம்மிடம் “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று கூறுகிறார்.  அன்னை மரியா கூறிய இச்சொற்கள், கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேல், பல மறையுரையாளர்களை, ஆன்மீக வழிகாட்டிகளைக் கவர்ந்த சொற்களாக இருந்து வருகின்றன. இச்சொற்களில் பொதிந்துள்ள அழகையும், அதன் பயனாக, கானா திருமணத்தில் நிகழ்ந்தனவற்றையும் நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.