2018-02-12 15:57:00

இறைவன் நமக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார்


பிப்.12,2018. 'பொறுமை காப்பது என்பது, விலகியிருத்தலைக் குறிக்கவில்லை, மாறாக, ஒருவருக்கே உரிய எல்லைகளுடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகும்' என இத்திங்களன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'சோதனைக்கு உட்படுத்தப்படும் விசுவாசம், பொறுமை நிலையை உருவாக்குகிறது' என்ற இத்திங்கள் திருப்பலி முதல் வாசக வார்த்தைகளை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொறுமை என்பது தோல்வியை ஒத்துக்கொண்டு ஒதுங்கி விடுவதல்ல, மாறாக, துன்பத்தையும் பொறுப்புணர்வோடு ஏற்று, மகிழ்ச்சியில் முன்னோக்கிச் செல்வதாகும் என்றார்.

எந்த துன்பம் வந்தாலும், நமக்குரிய எல்லைகளைக் கண்டுணர்ந்து, அதனோடு உரையாடலை மேற்கொள்ளும் ஞானமே, பொறுமை என்பதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.

மீட்பு வரலாற்றை நோக்கினோமென்றால், மக்கள் தன்னை விட்டு விலகிப் போனபோதெல்லாம், இறைவன் பொறுமையுடன், அவர்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தது போல், இப்போதும் நம் ஒவ்வொருவருடனும் துணை வந்து, நமக்காகக் காத்திருக்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.

மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்களுக்காக இவ்வேளையில் செபிப்போம் எனவும் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.