2018-02-12 15:00:00

இமயமாகும் இளமை : மனிதாபிமான செயலில் ஈடுபட்ட இளைஞர்


ஒரு நாள், திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பாக உள்ள சாலையில், திடீரென்று ஒரு பள்ளம் கிடந்தது. இதனைக் கவனிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுவது வாடிக்கையாக நடந்து வந்தது. அந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், வாகனங்களிலும், நடந்தும், சென்று வருகிறார்கள். அத்துடன், ஏராளமான வணிக நிறுவனங்களும் அந்தப் பகுதியில் உள்ளன. ஆனால், கடந்த சில வாரங்களாக, சாலையின் நடுவில் கிடந்த பள்ளத்தை ஒருவரும் சரிப்படுத்தாத நிலையில், அந்தப் பள்ளத்தை இளைஞர் ஒருவர் தானாக முன்வந்து சரிசெய்துள்ளார். அருகில் கிடந்த செங்கல், மண் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து, அந்தப் பள்ளத்தில் கொட்டி அதனை அவர் நிரப்பினார். அந்த இளைஞர் சொல்கிறார் –

என் பெயர் வல்லிக்கண்ணன். எனக்கு தூத்துக்குடிதான் சொந்த ஊர். தாய், தந்தை இறந்துவிட்டதால் உறவினர்கள் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. அதனால் பிழைப்புக்காக நெல்லைக்கு வந்தேன். இங்கே கிடைக்கும் வேலையைச் செய்து வருகிறேன். டீக்கடைகளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பேன். உணவகங்களின் கழிவுகளை அகற்ற உதவுவேன். இப்படிச் செய்யும் தொழில் காரணமாக சாப்பாடும், சிறிது வருமானமும் கிடைக்கின்றன. எனக்குக் குடியிருக்க இடம் எதுவும் கிடையாது. கடைகளின் முன்பாக இரவில் தங்கிக்கொள்வேன். இரயில் நிலையம் அருகில் உள்ள கழிவறையில் சுத்தம் செய்யும் வேலை செய்வதால், அங்கேயே குளிக்க முடியும். இப்படிப் பிழைத்து வரக்கூடிய நிலையில், இந்தப் பள்ளத்தில் வாகனங்களில் செல்பவர்கள், தினமும் விழுவதைப் பார்த்து வருந்தினேன். கடந்த வியாழனன்று (பிப்.08) குடும்பத்தோடு வந்த ஒருவர் இந்த இடத்தில் விழுந்துவிட்டார். இரயில்வே ஊழியர் ஒருவரும் இதில் விழுந்தார். இனியாவது அந்தப் பள்ளத்தில் யாரும் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மூடினேன்.  

தெருவோரத்தில் படுத்துறங்கும் இளைஞர் வல்லிக்கண்ணன் அவர்கள், தனி ஆளாக, இந்த மனிதாபிமானச் செயலில் ஈடுபட்டுள்ளார். வடகிழக்குப் பருவமழைக்குப் பின்னர், நெல்லை மாநகரப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள பெரும்பாலான சாலைகளைச் சரிப்படுத்த வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.