2018-02-08 15:18:00

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருத்தந்தையின் டுவிட்டர்கள்


பிப்.08,2018. மனித வர்த்தகத்திற்கு எதிராக உள்ளுணர்வு பெறவும், செபிக்கவும் அழைப்பு விடுக்கும் உலக நாள், பிப்ரவரி 8, இவ்வியாழனன்று, திருஅவையில், சிறப்பிக்கப்படுவதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உரிமைகள் இழந்தோரை மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

"மனித வர்க்கத்தால் பாதிக்கப்பட்டோர், மற்றும், போர், பட்டினி இவற்றிலிருந்து தப்பியோடிச் செல்வோர் ஆகியோரை, கனிவுள்ள உள்ளத்துடன் வரவேற்போமாக" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை 8.30 மணியளவில் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதேவண்ணம், பிற்பகல் 2.30 மணியளவில், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "மனித மாண்பு காயமடைந்த நிலையில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் துன்பத்திற்கு முன் நாம் அமைதியாக இருக்க இயலாது" என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்.

சூடான் நாட்டில் பிறந்து, மனித வர்த்தகம் என்ற கொடுமைக்கு உள்ளான, புனித ஜோசஃபின் பகிதாவின் (St Josephine Bakhita) திருநாளான பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிராக உள்ளுணர்வு பெறவும், செபிக்கவும் அழைப்பு விடுக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

மேலும், 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டு, மலேசியா, சிங்கப்பூர், புரூனேயி ஆகிய நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள, ஆயர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.