2018-02-08 15:30:00

கொலோசெயம், சிவப்பு வண்ணத்தில் ஒளிர்விக்கப்படும்


பிப்.08,2018. உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வண்ணம், பிப்ரவரி 24, சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள கொலோசெயம், சிவப்பு வண்ண விளக்குகளால் ஒளிர்விக்கப்படும் என்று Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

அதே நாளில், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள முக்கியமான கோவில்களும், அலெப்போ நகரில் உள்ள புனித எலியா மாரனைட் பேராலயமும் சிவப்பு விளக்குகளால் ஒளிர்விக்கப்பட உள்ளன.

சென்ற ஆண்டு, இதே கருத்துக்காக, இலண்டன் மாநகரின் பாராளுமன்ற கட்டடம், பாரிஸ் மாநகரில் உள்ள திரு இருதய பேராலயம், மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா பேராலயம் ஆகியவை சிவப்பு வண்ணத்தில் ஒளிர்விக்கப்பட்டன.

உரோம் நகரின் கொலோசெயம் சிவப்பு வண்ணத்தால் ஒளிர்விக்கப்படும் அதே வேளையில், பாகிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் ஆசியா பீபி மற்றும் போகோ ஹாரம் குழுவால் கொடுமைப்படுத்தப்பட்ட ரெபேக்கா ஆகிய இரு பெண்களின் உருவங்களும், அந்த விளக்குகளுடன் காண்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2015க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக் கொடுமைப்படுத்தப்பட்ட நாடுகளைக் குறித்து ஆய்வு செய்துள்ள Aid to the Church in Need அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள கூற்றின்படி, சீனா, எரித்திரியா, ஈராக், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அதற்கடுத்த நிலையில், எகிப்து, இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.