2018-02-06 14:16:00

இமயமாகும் இளமை - கவலைப்படாதீர்கள், கடவுள் பார்த்துக்கொள்வார்


நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்தது. பெருநகர் ஒன்றில், இளம் பெண்ணொருவர் அலுவலகத்தைவிட்டு அவசர, அவசரமாகக் கிளம்பினார். அவர், வீடு நோக்கி காரில் சென்ற வேளை, 'பெட்ரோல்' தீர்ந்துவிடவே, கார் வழியில் நின்றுவிட்டது. அப்பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. செய்வதறியாது திகைத்து நின்றார், இளம்பெண். அப்போது, அவ்வழியே ஓர் இளையவர் வந்தார். அவர் தோளில் ஒரு சாக்கு மூட்டை. அவர், தெருக்களில் உள்ள குப்பைகளிலிருந்து பொருள்களைச் சேகரிப்பவர்.

அவரைக் கண்டு முதலில் பயந்த இளம்பெண், பின்னர் அவரிடம், "பக்கத்தில் எங்காவது பெட்ரோல் கிடைக்குமா?" என்று தயங்கி, தயங்கிக் கேட்டார். அந்த இளையவர், பெண்ணிடம், "நீங்கள் தயவுசெய்து காரில் சென்று அமருங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் வெளியே வராதீர்கள். நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இளம்பெண், அவர் சொன்னதுபோலவே, காரில் சென்று அமர்ந்தார். பத்து, அல்லது. பதினைந்து நிமிடங்கள் சென்று, அந்த இளையவர், ஒரு பிளாஸ்டிக் கலயத்தில் பெட்ரோல் கொண்டுவந்து காரில் ஊற்றினார். அவருக்குப் பணம் தருவதற்காக தன் கைப்பையைத் தேடினார், இளம்பெண். அலுவகத்தைவிட்டு அவசரமாகக் கிளம்பியதால், கைப்பையை அங்கேயே வைத்துவிட்டதை உணர்ந்தார். தன் கழுத்தில் போட்டிருந்த ஒரு 'செயினை' அவர் கழற்றி, இளையவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்த இளையவர், "வேண்டாம் சகோதரி. இது என்னிடம் இருந்தால், யாரும் நம்ப மாட்டார்கள். எனக்கு வீணாக போலீஸ் தொல்லை வரும். கவலைப்படாமல் செல்லுங்கள். கடவுள் பார்த்துக்கொள்வார்" என்று கூறியபடி, அங்கிருந்து சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.