2018-02-05 09:33:00

விசுவாச வாழ்வு என்பது, ஆண்டவரோடு இருப்பதற்கு விரும்புவது


பிப்.03,2018.  “விசுவாச வாழ்வு என்பது, ஆண்டவரோடு இருப்பதற்கு விரும்புவதாகும். அதாவது, ஆண்டவர் இருக்குமிடங்களில் அவரைத் தொடர்ந்து தேடுவதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஒரு கத்தோலிக்கப் பங்குத்தளம், baseball விளையாட்டு இரசிகர்களை, தங்களின் விளையாட்டு அணிகளின் நிறங்களில் செபமாலைகளைச் செய்து, செபிப்பதற்கு ஊக்குவித்துள்ளவேளை, தங்களோடு இணைந்து திருத்தந்தையும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

பிப்ரவரி 06, வருகிற செவ்வாயன்று, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ள, Houston பகுதி திருப்பயணிகள், கைகளால் செய்த, Astros விளையாட்டு அணி செபமாலைகளை வழங்குவார்கள் என்று, CNA கத்தோலிக்க செய்தி கூறியுள்ளது.

இது குறித்து CNA செய்தியிடம் பேசிய, Houston இயேசு பிறப்பின் அறிவிப்பு ஆலய பங்குத்தந்தை பால் ஃபெலிக்ஸ் அவர்கள், மக்கள் தங்கள் வாழ்வின் அனைத்துச் செயல்களிலும், கடவுளையும் விசுவாசத்தையும் இணைக்கவும், செபிக்கவும் தூண்டும் நோக்கத்துடன், செபமாலை பக்தி முயற்சியை ஆரம்பித்ததாகத் தெரிவித்தார்.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டிலும், அந்த ஆலயத்தில், செபமாலை செபியுங்கள் என்ற விளம்பரம் எழுதப்பட்டிருந்தது என்று, CNA செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.