2018-02-05 15:47:00

உடல் சுகமளிப்பது, இதய சுகமளிப்பை நோக்கமாகக் கொண்ட‌து


பிப்.05,2018. இயேசுவின் புதுமைகளுக்கும், அவர் சந்தித்த மக்களில் தூண்டப்பட்ட விசுவாசத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரைக்குச் செவிமடுக்க, திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என, ஏறத்தாழ 20,000 பேர் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருக்க, இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகம் குறித்த தன் சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு ஆற்றியப் புதுமைகளின் பொதுவான நோக்கம் என்னவெனில், உடல் சுகமளிப்பது என்பது, இதய சுகமளிப்பை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் என்பதே, என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் தலையீட்டால் தீமைகளிலிருந்து விடுதலை பெற்று, நம் பழைய சக்தியைப் பெற்றுவிட்ட நாம், குணமடைந்த பேதுருவின் மாமியாரைப் போல், உடனடியாக இறைவனுக்கும் ஏனையோருக்கும் பணிவிடை புரியத் தயாராக வேண்டும் என்றார்.

இயேசு தங்கியிருந்த வீட்டைச் சுற்றி கூடிய மக்கள், இயேசுவிடம் வந்து குணம்பெற்றுச் சென்றதைப் பார்க்கும்போது, இந்த ஏழை மனித குலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அளவற்ற அன்பைக் காணமுடிகின்றது என மேலும் கூறினார் திருத்தந்தை.

இறையாட்சி குறித்த இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு, தெருக்களிலேயே தனக்குரிய இடத்தைக் கண்டுகொள்கிறது. அங்கே அறிவிக்கப்படும், இந்த மகிழ்வுச் செய்தி, மேலும் பல ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பதையும், நாமும் வெளி உலகை நோக்கிச் செல்லவேண்டும் என்பதையும் எதிர்பார்க்கிறது என, மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.